முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவும், முகமது அலி ஜின்னாவும் நாட்டைப் பிரித்தது ஞானப்பூர்வமான செயல் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ-வும், மத்தியப் பிரதேச முன்னாள் கேபினட் அமைச்சருமான சஜ்ஜன் சிங் வர்மா கருத்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிரதமர் மோடி ஜனவரி 26-ம் தேதி தனது உரையில், `ஜவஹர்லால் நேருவும், ஜின்னாவும்தான் 1947-ல் நாட்டைப் பிரித்ததற்குக் காரணம்’ என்று கூறினார். ஆம்! நாடு இருவருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.
நாட்டை இரண்டாகப் பிரிப்பதன் மூலம் இரு தலைவர்களும் விவேகமான, புத்திசாலித்தனமான வேலையைச் செய்திருக்கிறார்கள். ஜின்னா ஒரு சுதந்திரப் போராட்ட வீரர், அதை நினைவில் கொள்ள வேண்டும். அவர் நாட்டை உடைக்கவில்லை. ஆனால், அப்போது எது சரியோ அதைச் செய்தார். அவர் சுதந்திரப் போராட்ட வீரர் இல்லையா? ஒருவர் முஸ்லிமாக இருப்பதால் சுதந்திரப் போராட்ட வீரர் என்ற வரையறை மாறுமா?” எனக் கூறியிருந்தார்.
மத்தியப் பிரதேச முன்னாள் கேபினட் அமைச்சர் சஜ்ஜன் சிங் வர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க தலைவரும், மத்தியப் பிரதேச அமைச்சருமான விஸ்வாஸ் சாரங் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தபோது, “பிரிவினைக்கு ஜவஹர்லால் நேரு, ஜின்னா ஆகியோரின் காங்கிரஸ்தான் காரணம் என்று இப்போது தெளிவாகத் தெரிகிறது. நாட்டின் வரலாறும் அதையே கூறுகிறது. ஆனால், அவர்கள் அதை நியாயப்படுத்துவது வெட்கக்கேடானது. பிரிவினையின்போது ஆயிரக்கணக்கான மக்களின் படுகொலைக்கு ஜவஹர்லால் நேருதான் காரணம் என்று அர்த்தம்.
ஒருவர் பாகிஸ்தானின் அதிபராக வேண்டும், மற்றவர் பிரதமராக வேண்டும் என்று விரும்பினர். நேருவும், ஜின்னாவும் தங்கள் அரசியல் ஆசைக்காகப் பிரிவினையை ஏற்படுத்தினார்கள். ஆனால் மகாத்மா காந்தி ஒன்றுபட்ட இந்தியாவை விரும்பினார். தற்போதுவரை சஜ்ஜன் சிங் வர்மாவின் கருத்துக்கு காங்கிரஸிலிருந்து யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இதைத் தெளிவுபடுத்தவில்லை என்றால், இதை நாங்கள் காங்கிரஸின் அதிகாரபூர்வ அறிக்கையாக எடுத்துக்கொள்வோம். காங்கிரஸ் உறுப்பினர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுகின்றனர். நேருவால் தொடங்கப்பட்ட இந்தியாவை உடைக்கும் பாரம்பர்யத்தை அவர் குடும்பத்தினர் இன்றும் பின்பற்றுகின்றனர்” என்று காட்டமாகத் தெரிவித்தார்.