லக்னோ: நாட்டில் பலமான எதிர்க்கட்சி இருக்க வேண்டும்,’ என்று பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள இந்திரா காந்தி அரங்கில் நேற்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதில், ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான 1,406 திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில் இம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். விழாவில் மோடி பேசியதாவது:இந்தியாவின் வளர்ச்சியில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு உத்தர பிரதேசம்தான் உந்து சக்தியாக இருக்கப் போகிறது. வலுவான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில்தான், ஒரே நாடு- ஒரே வரி, ஒரு நாடு- ஒரே கார்டு ஆகிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எங்கள் அரசின் இந்த திடமான கொள்கைகள், நாட்டின் எதிர்காலத்தை பிரதிபலிப்பதாக உள்ளன. சீர்த்திருத்தங்கள் மூலமாக இந்தியாவை ஒரு தேசமாக வலுப்படுத்த உழைத்து கொண்டு இருக்கிறோம். உலக நாடுகள் அனைத்தும் இன்று, நமது நாட்டின் செயல்திறனை கண்டு வியந்து பாராட்டுகின்றன. ஜி-20 நாடுகளின் பொருளாதாரத்தில் நாமும் வேகமாக முன்னேறி வருகிறோம். உலக சில்லறை வர்த்தக குறியீட்டில் இந்தியா 2வது இடத்தை பிடித்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.இந்த விழாவை தொடர்ந்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் சொந்த கிராமமான பாரனுக் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் மோடி கலந்து கொண்டார். அங்கு பேசிய அவர், ‘‘நாட்டு மக்களிடம் உள்ள திறமைகளை குடும்ப அரசியல் பாழ்படுத்தி வருகிறது. குடும்ப கட்சி நடத்துபவர்கள் எனக்கு எதிராக ஒன்று திரள்கின்றனர். எனக்கு யாருடனும் தனிப்பட்ட பிரச்னைகள் கிடையாது. குடும்ப அரசியல் நிறுத்தப்பட வேண்டும். குக்கிராமத்தில் பிறந்தவர்களும் நாட்டின் ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் வர வேண்டும். நாட்டில் வலுவான எதிர்க்கட்சி இருக்க வேண்டும். அதற்கு, குடும்ப அரசியலில் உள்ளவர்கள் அதில் இருந்து விடுபட்டு வெளியே வர வேண்டும்,’’ என்றார்.