இம்ரான் கான் அரசு பாகிஸ்தானை சரியாக வழிநடத்தவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்து, அவர் பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, அமெரிக்கா செய்த சதியால், தன்னுடைய ஆட்சி கவிழ்க்கப்பட்டதாக இம்ரான் கான் குற்றம்சாட்டி வருகிறார். மேலும், ஷெபாஸ் ஷெரீப் அரசை, `இறக்குமதி அரசு’ எனவும் விமர்சித்து வருகிறார்.
இஸ்லாமாபாத்தில் கட்சித் தொண்டர்களைக் குவித்து, தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை போராட்டம் நடத்தவிருப்பதாக திட்டமிட்டார். அதன் பிறகு தொண்டர்கள் குவிந்த நிலையில், கடைசி நேரத்தில் போராட்டத்தை கைவிட்டார்.
இந்த நிலையில், இம்ரான் கான் ‘போல் நியூஸ்’ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “பாகிஸ்தானில் தேர்தலை அறிவிக்கக் கோரி, போராட்டத்தில் ஈடுபடவிருக்கிற எங்கள் கட்சித் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அது தொடர்பான உத்தரவு வந்ததும், அடுத்த போராட்டம் தொடர்பாக அறிவிக்கவிருக்கிறோம். அவர்கள் சட்டம் மற்றும் அரசியலமைப்பு வழிகளில் எங்களை தேர்தலுக்கு செல்ல அனுமதிக்கிறார்களா என்பதை பார்ப்போம். அப்படி அவர்கள் எங்களை அனுமதிக்கவில்லையென்றால் இந்த நாடு உள்நாட்டுப் போரை நோக்கிச் செல்லும்” என்றார்.