வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி,-ஒடிசாவில் உள்ள பிரசித்தி பெற்ற புரி ஜெகன்னாதர் கோவிலில், 800 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ரூ.800 கோடி
ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு புரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஜெகன்னாதர் கோவிலை, உலகப் புகழ் பெற்ற பாரம்பரிய தலமாக மாற்றுவதற்காக, மாநில அரசு, 800 கோடி ரூபாய் செலவில் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்காக கோவிலில் கட்டுமான மற்றும் அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. இவற்றுக்கு தடை விதிக்கக்கோரி பக்தர்கள் அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:புரி ஜெகன்னாதர் கோவில் நுாற்றாண்டு பழமை வாய்ந்தது. பழங்கால நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி பாதுகாப்பு சட்டத்தின் கீழ், இந்த கோவில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
தடை செய்யப்பட்ட 100 மீட்டர் துாரத்துக்குள் மாநில அரசு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு, தேசிய நினைவுச் சின்னங்கள் துறையைச் சேர்ந்த அதிகாரிகளிடம் சான்றிதழ் பெற்றதாக கூறப்படுகிறது. மத்திய அல்லது மாநில அரசின் அகழ்வாராய்ச்சி இயக்குனர்கள் தான் இதற்கு அனுமதி அளிக்க வேண்டும். மாநில அரசு தற்போது மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகளால், கோவிலின் பாரம்பரிய பெருமைகளுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
அடிப்படை வசதி
இந்த மனு, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதத்துக்குப் பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு;ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் கோவிலில், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை. ஏற்கனவே கோவில் கட்டுமானம் தொடர்பான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றியே தற்போது பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சொர்க்கமே தரையில் இடிந்து விழப் போவது போல், மிகவும் அவசரமாக இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
சமீப காலமாக இதுபோன்ற தேவையற்ற பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது. பொது நலனுக்கு அல்லாமல், பொது நலனுக்கு கேடு விளைவிக்கும் வகையில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. மிக அற்பமான விளம்பர காரணங்களுக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. வழக்குக்கான செலவு தொகையான 1 லட்சம் ரூபாயை, மனுதாரர்கள் ஒவ்வொருவரும் ஒடிசா அரசுக்கு கொடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Advertisement