மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கும் மட்டக்களப்பு மாவட்ட மத ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்குமிடையில் விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (02) மாலை இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடலின்போது தற்போதைய நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப்பாதுகாப்பு, அத்தியாவசிய சேவைகள் உட்பட பலதரப்பட்ட பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
தற்போதைய இடரான நெருக்கடியான சூழலிலே மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை எவ்வாறு முகம்கொடுத்து மக்களுக்கு சுமூகமான சூழலை ஏற்படுத்தலாம் என்பது தொடர்பான எட்டு விடயங்கள் அடங்கி ஆலோசனைகளை குறித்த கலந்துரையாடலின்போது பல்சமயம் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் முன்வைத்திருந்தனர்.
எதிர்வரும் 07.06.2022 திகதி புதன்கிழமை, மாவட்டத்திலுள்ள துறைசார்ந்த அதிகாரிகளுடனான சந்திப்பொன்றிற்கு மாவட்ட அரசாங்க அதிபரினால் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் எதிர்காலத்தில் மாவட்டத்தில் ஏற்பட இருக்கின்ற பொருளாதார நெருக்கடியுடன் கூடிய பிரச்சனைகளுக்கு முடியுமானவரை தீர்வினைப் பெறுவதோடு உணவுப் பாதுகாப்பு தொடர்பான சில சாத்தியமான செயற்பாடுகளையும் நடைமுறைப் படுத்தக்கூடியதாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட கரீட்டாஸ் எகெட் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்பணி ஏ.யேசுதாசன் அடிகளார், மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ வீ.கே.சிவபாலன் குருக்கள், மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் செயலாளர் அருட்பணி கே.ஜெகதாஸ், சர்வமத ஒன்றியத்தின் உபதலைவர் மௌலவி சாஜஹான் உள்ளிட்ட சர்வமத ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.