மதுரை: மதுரை விளாங்குடியில் மாநகராட்சி சார்பில் புதிதாக பாதாளசாக்கடை அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டியபோது ஒப்பந்த நிறுவன தொழிலாளர் ஒருவர் மண்ணுக்குள் புதைந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 மாதம் முன்தான் பாதாள சாக்கடை பணியில் 3 மாநகராட்சி ஒப்பந்த நிறுவன தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்தநிலையில் தற்போது மீண்டும் மாநகராட்சி பணியில் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது மாநகராட்சி கண்காணிப்பு இல்லாமல் பணிகள் நடப்பதை உறுதிசெய்துள்ளது.
மதுரை மாநகராட்சி வார்டுகளில் புதிதாக பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடக்கிறது. அதற்காக ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் தொழிலாளர்களை கொண்டு பாதாள சாக்கடை அமைப்பதற்காக பள்ளங்கள் தோண்டி அதில் குழாய்களை பதித்து கொண்டிருக்கின்றது. இதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பல்வேறு வார்டுகளில் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். விளாங்குடியில் பாதாள சாக்கடைப்பணிக்காக தொழிலாளர்கள் சிலர் பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தனர்.
அப்போது வீரணன் என்ற தொழிலாளர் மண் சரிந்து விழுந்ததும் அவர் மண்ணுக்குள் புதைந்துவிட்டார். அதிர்ச்சியடைந்த மற்ற பணியாளர்கள் மண்ணுக்குள் புதைந்த தொழிலாளரை மீட்க போராடினர். ஜேசிபி இயந்திரத்தை கொண்டு அந்த தொழிலாளியை மீட்டபோது அவர் இறந்தநிலையில் தலை மட்டும் தனியாக வந்தது. உடல் மண்ணுக்குள் புதைந்துவிட்டது. பெரும் போராட்டத்திற்கு பிறகு மீட்பு குழுவினர் இறந்த அந்த தொழிலாளி உடலையும் மீட்டனர்.
மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். கடந்த 2 மாதம் முன் மதுரை நேரு நகரில் பாதாள சாக்கடை கழிவு நீர் சேகரிப்பு தொட்டி பராமரிப்பு பணியில் ஈடுபட்ட 3 ஒப்பந்த தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் மாநகராட்சி பணியாளர்கள் மேற்பார்வை இல்லாமல் அந்த பணி நடந்ததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.
அதன்பிறகும் மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாமல் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலே மாநகராட்சி பணியாளர்கள், ஒப்பந்த நிறுவன தொழிலாளர்கள் தொடர்ந்து பாதாள சாக்கடை அமைக்கும் பணி, பாதாள சாக்கடை பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் மேயர் இந்திராணி முன்னிலையிலே மாநகராட்சி தூய்மைப் பணியாளர் ஒருவர் பாதுகாப்பு கவசம், கையுறை, செறுப்பு கூட இல்லாமல் பாதாளசாக்கடை சீரமைப்பு பணியை மேற்கொண்டது சர்ச்சை ஏற்படுத்தியது.
அதன்பிறகு மேயர் இந்திராணி அறிக்கை வெளியிட்டு இதுபோல் மாநகராட்சி பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் யாரும் பாதுகாப்பு உபகரணங்கள், கவசங்கள் இல்லாமல் பாதாள சாக்கடை பராமரிப்பு பணி, தூய்மைப் பணியில் ஈடுபடக்கூடாது என்றும், அவர்களை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
அவர் அறிவுறுத்திய சில நாட்களுக்குள்ளாகவே தற்போது புதிதாக பாதாள சாக்கடை அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஒரு ஒப்பந்த நிறுவன தொழிலாளி ஒருவர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநகராட்சியில் டெண்டர் எடுத்து பணிகள் தனியார் நிறுவனம் சார்பில் பணிகள் நடந்தாலும் அப்பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்பார்வை மற்றும் கண்காணிப்பிலே மேற்கொள்ள வேண்டும். அவர்கள் முன்னிலையிலே அனைத்து வகை பணிகளும் நடக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான ஒப்பந்தப்பணிகள், மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாமலே இப்படி நடப்பதால் தொடர்ந்து மாநகராட்சி ஒப்பந்தப்பணியாளர்கள், ஒப்பந்த நிறுவன தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.
முதல்வர் இரங்கல்: இதனிடையே, மண்சரிவினால் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வீரணன் என்ற சதீஷ் (வயது 34) என்பவர் உயிரிழந்தற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து ரூபாய் ஐந்து லட்சம் நிதியுதவி வழங்க உத்திரவிட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு அமைப்பு சாரா கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய நிதியத்திலிருந்தும் ரூபாய் ஐந்து லட்சம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.