தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள வைகை அணை 71 அடி உயரம் கொண்டது. அணையின் நீர்மட்டம் 62.50 அடியாகவும், நீர் இருப்பு 4,058 மில்லியன் கன அடியாகவும் இருக்கிறது. இந்நிலையில் அணையில் இருந்து பெரியாறு – வைகை பிரதான கால்வாயின் கீழ் உள்ள இரு போக பாசன நிலங்களின், முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதனடிப்படையில் நேற்று ஜூன் 2-ம் தேதி முதல் 45 நாள்களுக்கு முழுமையாக விநாடிக்கு 900 கன அடி வீதமும், அதைத் தொடர்ந்து 75 நாள்களுக்கு முறைப்பாசன அடிப்படையில் என ஆக மொத்தம் 120 நாள்களுக்கு 6,739 மி.கன அடி தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டம். நிலக்கோட்டை தாலுகாவில் 1,797 ஏக்கரும், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகாவில் 16,452 ஏக்கர் மற்றும் மதுரை வடக்கு வட்டத்தில் 26,792 ஏக்கர் என ஆக மொத்தம் 45,041 நிலங்கள் பாசன வசதி அடைகின்றன.
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் வைகை அணையில் உள்ள 7 பெரிய மதகுகள் வழியாகத் தண்ணீர் திறந்து வைத்தனர். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, “மதுரை, திண்டுக்கல் மாவட்ட பெரியாறு பிரதான கால்வாய் பாசன வயலில் உள்ள 45,000 ஏக்கர் பாசன நிலங்களுக்கு கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அதே நாளில் வைகை அணையில் இருந்து விநாடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஜூன் 1-ம் தேதி முல்லைப் பெரியாறு அணையும் ஜூன் 2-ம் தேதி வைகை அணையும் திறக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகள் எல்லாம் குறிப்பிட்ட காலத்தில் பயிர் செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு தமிழக முதல்வர் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார்.
குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே காவிரி நீர் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு நாகப்பட்டினம் வரை சேரும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதுவரை அரசியல் வரலாற்றில் இது நடந்ததே இல்லை. தமிழகத்தில் அனைத்து விவசாயிகளும் சுபிட்சமாக வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மதுரை லோயர்கேம்ப் குடிநீர் திட்டம் மிகவும் அத்தியாவசியமான ஒரு திட்டம். ஏற்கெனவே வைகை அணையில் இருந்து மதுரைக்கு குழாய்கள் மூலமாக குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், வறட்சி காலத்தில் மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக இந்த மதுரை லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பாதிப்பு வராமல் அவர்களின் குறைகளைக் கேட்டு எந்தப் பாரபட்சமும் இல்லாமல் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.
தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு தண்ணீர் திறப்பின் மூலம் இருபோக சாகுபடி முழுமையாக முடிக்க முடிந்துள்ளது. மதுரை-லோயர்கேம்ப் குடிநீர் திட்டம் மூலம் தேனி மாவட்டம் பாலைவனமாகிவிடும் என்பதெல்லாம் வெறும் யூகமான கருத்தாகும். தேனி மாவட்டம் எப்போதும் பசுமையான மாவட்டமாகவே இருக்கும். அதற்கு தகுந்தாற்போல் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார்” என்றார்.