க.சண்முகவடிவேல், திருச்சி
திருச்சி மாவட்டத்தில் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினை சிறப்பாக மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் சு.சிவராசு பேசியதாவது: “தமிழக முதல்வர் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினை சென்னையில் தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி, அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான முக்கிய சுற்றுலாத்தலங்கள், பிரசித்தி பெற்ற கோயில்கள், சந்தைகள், உழவர் சந்தைகள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளிலும் தீவிர தூய்மை பணி மேற்கொள்ளப்படும்.
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மை பணி முகாம்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படும்.
மேலும் குப்பையில்லா நகரங்களை உருவாக்கும் வகையிலும் எனது குப்பை… எனது பொறுப்பு என்பதை அனைவரும் பின்பற்றிடும் வகையிலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். நகரங்களில் தூய்மைக்கான மக்களின் இயக்கத்தில் பொதுமக்கள் பெரிதும் பங்கேற்று நகரங்களை தூய்மையாக வைத்திட தங்களது பங்களிப்பினை செலுத்திட வேண்டும் என்றும், அதற்கான விழிப்புணர்வை மக்களிடையே அலுவலர்கள் ஏற்படுத்திட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அதனடிப்படையில், திருச்சி மாநகராட்சியில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சி தலைவர் சு.சிவராசு, மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், மாநகராட்சி அதிகாரிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர், தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் அனைவரும் என் நகரத்தை தூய்மையாக வைக்க உதவி செய்வேன் என உறுதி மொழி ஏற்றனர்.
திருச்சி மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் வாகனங்களில் தூய்மைப் பணியாளர்கள் வீடு தேடி வரும்போது மக்கும் குப்பைகளை பச்சை நிற தொட்டியிலும், மக்காத குப்பைகளை நீல நிற தொட்டியிலும், தீங்கு விளைவிக்கும் வீட்டு உபயோக குப்பைகளை மஞ்சள் நிற தொட்டியிலும் என பிரித்து வழங்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் இந்தத் தூய்மைப் பணி மத்தியப் பேருந்துநிலையம் முதல் ரயில்வே ஜங்ஷன் ரவுண்டானா வரையிலும், சத்திரம் பேருந்து நிலையம் முதல் தெப்பக்குளம் வரையிலும், டி.வி.எஸ்.டோல்கேட் முதல் ஆவின் அலுவலகம் வரையிலும், அரியமங்கலத்தில் லட்சுமி நர்சரிபள்ளி அருகில் தீப்பெட்டித் தெரு மலையடிவாரப் பகுதியிலும், தில்லைநகர் 1-ஆவது குறுக்குத் தெருமுதல் 11-ஆவது குறுக்குத் தெருவரையிலும் நடைபெற்றது. இதில், 1,425 நபர்கள் பங்கேற்று இந்தத் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
இதைப்போல, இம்மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளிலும் இந்தத் தூய்மைப் பணிநடைபெற்றது. மேலும், குப்பையில்லா நகரங்களைஉருவாக்கும் வகையிலும், “எனது குப்பை – எனது பொறுப்பு” என்பதை அனைவரும் பின்பற்றிடும் வகையிலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
எனது குப்பை, எனது தூய்மை என துடப்பத்தை இன்று கையில் எடுத்து போட்டோ போஸ் கொடுத்ததோடு முடிந்து விட்டதாக கருதாமல் 65 வார்டுகளிலும் அந்தந்த வார்டு மாமன்ற உறுப்பினர்கள் முறையாக பணியாற்றுகின்றனரா என்பதையும் கண்காணித்தால் விரைவில் தூய்மை மாநகரில் திருச்சி முதலிடம் பிடிக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“