புதுடெல்லி:
மாநிலங்களவைக்கு விரைவில் காலியாக உள்ள 57 இடங்களுக்கு வரும் 10-ம் தேதி தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக பா.ஜ.க, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் நடந்தது
இதற்கிடையே, வேட்பு மனுக்கள் பரிசீலனை முடித்து, திரும்ப பெறுவதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், 41 இடங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில் அதிகபட்சமாக பா.ஜ.க.வுக்கு 14 இடங்கள் கிடைத்துள்ளன. காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் தலா 4 இடங்கள், தி.மு.க., பிஜூ ஜனதாதளம் கட்சிகள் தலா 3 உறுப்பினர்கள், ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதாதளம், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, அ.தி.மு.க. கட்சிகள் தலா 2 எம்.பி.க்களைப் பெற்றுள்ளன.
மேலும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஐக்கிய ஜனதாதளம், சமாஜ்வாடி, ராஷ்டிரிய லோக்தளம் கட்சிகள் தலா ஓரிடத்தையும், சுயேட்சை ஒருவரும் வென்றுள்ளனர்.
வெற்றி பெற்றவர்களில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம், காங்கிரஸ் முன்னாள் தலைவர் கபில் சிபல், லாலு பிரசாத் மகள் மிசா பாரதி, பா.ஜ.க.வின் சுமித்ரா வால்மிகி, கவிதா பதிதார் ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர்.