ரஷ்யாவிடமிருந்து இந்தியா சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது என்பது தெரிந்ததே.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்ததன் காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்தன.
இந்த தடை காரணமாக ரஷ்யாவில் கச்சா எண்ணெயின் இருப்பு அதிகரித்து வருவதையடுத்து இந்தியாவுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெயை ரஷ்யா விற்பனை செய்து வருகிறது.
சும்மா எகிறி வரும் கச்சா எண்ணெய் விலை.. தள்ளுபடியில் எண்ணெய் வாங்கிக் குவிக்கும் இந்தியா..!
உக்ரைன் -ரஷ்யா போர்
இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் போர் காரணமாக ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில், ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கி அதை சுத்திகரித்து நல்ல லாபத்தில் அமெரிக்காவுக்கே பெட்ரோல் டீசலாக விற்பனை செய்து வருகிறது. இதுதான் இந்தியாவின் ராஜதந்திரமோ என ஐரோப்பிய நாடுகளே ஆச்சரியத்தில் உள்ளன.
ரஷ்யாவில் இருந்து இறக்குமதி
அது மட்டுமின்றி டாலரில் இல்லாமல் இந்திய ரூபாய் மதிப்பில் அல்லது ரஷ்ய ரூபிள் மதிப்பில் பரிவர்த்தனை நடைபெறுகிறது .இதனால் ரஷ்யாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ள கச்சா எண்ணெயின் அளவு சாதனையை எட்டி வருகிறது.
கச்சா எண்ணெய்
கடந்த மே மாதத்தில் மட்டும் ஒரு நாளைக்கு 840,645 பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்துள்ளது. ஜூன் மாதத்தில் இந்த அளவு இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்றுமதி
இந்தியா இறக்குமதி செய்யும் மொத்த கச்சா எண்ணெயில் 25% ரஷ்யாவிடம் இருந்து தான் இறக்குமதி செய்கிறது. இந்த கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து பெட்ரோல் மற்றும் டீசல் ஆக அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பெரும் லாபத்தை இந்திய அரசு ஆயில் நிறுவனமும், ரிலையன்ஸ் உள்பட தனியார் எண்ணெய் நிறுவனங்களும் சம்பாதித்து வருகின்றன.
இந்தியா மீது தடையா?
இந்தியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா விமர்சனம் செய்தாலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கக் கூடாது என்று எந்தவித தடை உத்தரவும் இந்தியா மீது அமெரிக்கா பிறப்பிக்க முடியாத நிலையில் உள்ளது.
இந்தியாவின் ராஜதந்திரம்
நேரடியாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கிக்கொண்டிருந்த அமெரிக்கா, தற்போது ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதிக்கு தடை விதித்தாலும், அதே கச்சா எண்ணெய்யை இந்தியாவிடம் இருந்து வாங்கி வருவதால் அந்த தடைக்கே அர்த்தமில்லாமல் போய்விட்டது. இதைத்தான் இந்தியாவின் ராஜதந்திரம் என உலக நாடுகள் கூறுகின்றன.
லாபம்
இதனால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அளவில் லாபம் கிடைக்கிறது என்பது அமெரிக்காவுக்கு தெரிந்தாலும் அதை தடுத்து நிறுத்துவது எப்படி என்று தெரியாமல் திணறி வருகிறது.
ரிலையன்ஸ்
இந்தியாவில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனம் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களில் முன்னணியில் இருப்பதால் இந்நிறுவனம் 1.2 மில்லியன் பேரல்கள் திறன் கொண்ட சுத்திகரிப்பு வளாகத்தை கொண்டிடுள்ளது. இதனால் இந்நிறுவனத்திற்கு தினந்தோறும் மில்லியன் கணக்கில் லாபம் சம்பாதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவுக்கு மட்டுமின்றி ஆஸ்திரேலியா, ஐரோப்பிய உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதன் மூலம் மிகப்பெரிய லாபத்தை கடந்த ஒரு மாதத்தில் பெற்றுள்ளது.
தடை
உக்ரைன் – ரஷ்ய போரினால் உலக நாடுகள் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டு இருந்தாலும் இந்தியாவின் எண்ணெய் நிறுவனங்கள் மட்டும் மிகப்பெரிய லாபத்தை பெற்று வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ஐரோப்பிய யூனியன் தரப்பு இந்தியா போன்ற மூன்றாவது நாட்டில் இருந்து கச்சா எண்ணெயில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வாங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி வந்தாலும் இது நடைமுறையில் சாத்தியமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஏமாற்றம் தருமா?
ஒருவேளை இந்தியாவிடம் இருந்து பெட்ரோல் டீசலை இறக்குமதி செய்யக் கூடாது என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தால் இந்திய நிறுவனங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது நிகழுமா? என்றால் நிகழ வாய்ப்பே இல்லை என்று தான் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
Indian private refiners profit from cheap Russian crude as state refiners suffer
Indian private refiners profit from cheap Russian crude as state refiners suffer | ரஷ்யாவிடம் வாங்கி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா: இதுதான் ராஜதந்திரமோ?