ரஷ்யாவால் தொடங்கப்பட்ட போரில் உக்ரைன் வெற்றிபெறும் என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உறுதியாக தெரிவித்தார்.
உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கி இன்று 100-வது நாளில் ரஷ்ய துருப்புக்கள் டான்பாஸ் பிராந்தியத்தைத் தாக்கிவருகிறது.
பிப்ரவரி 24 அன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது படைகளை உக்ரைனுக்குள் அனுப்ப உத்தரவிட்டதிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர், மில்லியன் கணக்கானவர்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர் மற்றும் நகரங்கள் இடிபாடுகளாக மாறிவிட்டன. போரில் ரஷ்யாவின் முன்னேற்றத்தை உக்ரைனிய படைகள் கடுமையாக போராடி தலைநகரைச் சுற்றி இருந்து ரஷ்யர்களை விரட்டியது.
2014-ஆம் ஆண்டு கிரிமியா மற்றும் டோன்பாஸின் சில பகுதிகளை கைப்பற்றியதில் இருந்து ரஷ்யா தனது ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த நிலத்தை மும்மடங்காக உயர்த்தி உக்ரைன் பிரதேசத்தில் ஐந்தில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒரு விடியோவை வெளியிட்டார் . அதில், “எங்கள் அணி மிகவும் பெரியது. உக்ரைனின் ஆயுதப் படைகள் இங்கே உள்ளன. மேலும் மிக முக்கியமானது என்னவென்றால், எங்கள் நாட்டின் குடிமக்கள் இங்கே இருக்கிறார்கள். ஏற்கனவே 100 நாட்களுக்கு உக்ரைனைப் பாதுகாத்து வருகிறோம்” என்று அவர் கூறினார்.
ஜனாதிபதி அலுவலக கட்டிடத்தை பின்னணியாக கொண்ட அந்த வீடியோவில் “வெற்றி நமதே” என்று அவர் அறிவித்தார்.