லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவிற்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார். அங்கு காலை 11 மணியளவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டின் போது, சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 1,406 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
வேளாண் மற்றும் அதனை சார்ந்த இதர துறைகள், தகவல் மற்றும் மின்னணு தொழில்நுட்பம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மருந்து உற்பத்தி, சுற்றுலா, பாதுகாப்பு, கைத்தறி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த 1,406 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.
குறிப்பாக உத்தர பிரதேசத்தை முதலீட்டாளர்களை ஈர்க்கக் கூடிய மாநிலமாக மாற்ற வேண்டும் என அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஏற்கனவே அறிவித்துள்ளார். அதன் ஒரு பகுதியாக இந்த முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது.
முன்னதாக 2018 ஆம் ஆண்டு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் சுமார் 61,500 கோடி ரூபாய் மதிப்பிலான 81 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற 2-வது முதலீட்டாளர்கள் மாநாட்டில், 67,290 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அந்த வகையில் இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 80 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது.
இதனை தொடர்ந்து கான்பூரில் உள்ள பத்ரிமாதா மடத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உடன் இணைந்து பிரதமர் மோடி செல்கிறார். மேலும் அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.