மும்பை: லுக் அவுட் நோட்டீஸ் அறிவிக்கப்பட்ட நடிகை ரியா சக்ரபோர்த்தி வெளிநாடு சென்று வருவதற்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தைத் தொடர்ந்து, அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி போதைப்பொருள் வழக்கு தொடர்பாக கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பரில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அதே ஆண்டு அக்டோபரில் மும்பை உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. முன்னதாக அவர் தேடப்படும் குற்றவாளியாக விசாரணை அமைப்புகளால் அறிவிக்கப்பட்டதால், அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீசும் வெளியிடப்பட்டது. மும்பை போலீஸ், போதைப் பொருள் தடுப்பு பிரிவு, பாட்னா போலீஸ் விசாரணை, சிபிஐ, அமலாக்கப்பிரிவு என பல அமைப்புகளும் வழக்குகளை விசாரித்து வந்ததால், ரியா சக்ரபோர்த்தி இந்தியாவை விட்டு ெவளிநாடு செல்ல முடியாமல் தவித்து வந்தார். இந்நிலையில், அபுதாபியில் நடக்கும் ஐஐஎப்ஏ விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால், தான் வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் எனக்கூறி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ரியா சக்ரபோர்த்தி மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜூன் 2 (நேற்று) முதல் வரும் 5ம் தேதி வரை அபுதாபிக்குச் சென்று வர அனுமதி அளிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின் பிரபல நடிகை ரியா சக்ரபோர்த்தி வெளிநாடு செல்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் வெளிநாடு செல்ல ரியா சக்ரபோர்த்திக்கு நீதிமன்றம் அனுமதி அளித்து இருந்தாலும் கூட, அவர் தனக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் குறித்து தனக்குத் தெரியாது தெரிவித்துள்ளார். அதனால், தான் வெளிநாடு செல்லப் போவதில்ைல என்று கூறியுள்ளார். இத்தனை வழக்குகளுக்கு மத்தியிலும், ஜாமீனில் வெளியே வந்த சில மாதங்களில் மீண்டும் சினிமாவில் ரியா சக்ரபோர்த்தி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.