சென்னை/ உதகை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நீலகிரி, கோவை, சேலம், வேலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் (பொறுப்பு) பா.கீதா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகப் பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கில் காற்றின் திசை மாறுபாடு ஏற்பட்டு வருகிறது. இதனால், ஜூன் 3, 4-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல்மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
3-ம் தேதி குமரிக்கடல், மன்னார்வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்திலும், லட்சத்தீவு, கேரளா, அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 45-55 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக் கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குமரி, நீலகிரியில் தொடர் மழை
இதற்கிடையில், தமிழகத்தின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கெனவே விட்டுவிட்டு பெய்து வந்த மழைதற்போது தொடர்ச்சியாக பெய்வதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
இங்குள்ள முக்கிய நீர் ஆதாரங்களான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நிரம்பியுள்ளன. மலையோர பகுதிகளில் பெய்யும்மழையால் அணை நீரும் சேர்ந்துகுழித்துறை தாமிரபரணி ஆற்றில்மழை நீர் கரைபுரண்டு ஓடுகிறது.
நேற்று அதிகபட்சமாக குழித்துறையில் 5 செ.மீ. மழை பெய்தது.
நீலகிரி மாவட்டத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்திருக்கிறது. மழை பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டிவருகிறது.
இந்திய மண், நீர் வள பாதுகாப்பு நிறுவன முதன்மை விஞ்ஞானி கண்ணன் கூறும்போது, ‘‘நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மேமாதங்களில் பெய்த கோடை மழையின் 60 ஆண்டு சராசரி அளவு 230 மி.மீ. ஆனால், இந்த ஆண்டு கோடை மழை 454 மி.மீ. என பதிவாகியுள்ளது. மே மாதத்தில் மட்டும் 268 மி.மீ. பெய்துள்ளது. இது 60 ஆண்டு சராசரியைவிட 2 மடங்காகும்’’ என்றார்.