கொலைகளும், அதற்கான பழிவாங்கலும் அதற்குப் பின்னால் இயங்கும் மிகப்பெரிய நெட்வொர்க்கும்தான் இந்த `விக்ரம்’ படத்தின் கதைக்களம்.
அடுத்தடுத்து காவல்துறையைச் சேர்ந்தவர்கள் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள். அண்டர்கவரில், அது குறித்துத் துப்புத் துலக்க ஒரு குழுவை காவல்துறை இறக்கிவிடுகிறது. பகத் பாசில் தலைமையிலான அந்தக் குழு, கொலையான நபர்களின் ஆதியை நோக்கிப் பயணிக்கிறார்கள். கொலையான நபர்கள் யார், கொலை செய்பவர்களின் மாஸ்டர் மைன்ட் யார், அவரின் நோக்கம்தான் என்ன, என்பதாக விரிகிறது படம். முந்தைய சினிமாக்களின் ரெபரென்ஸ், அடுத்த பாகத்துக்கான லீடு, தமிழ் சினிமாவில் ஒரு யுனிவர்ஸைக் கட்டமைப்பது எனச் சில பரீட்சார்த்த முயற்சிகளுடன் களம் இறங்கியிருக்கிறான் இந்த ‘விக்ரம்’.
1986-ல் வெளியான விக்ரமுக்குப் பின்னர் அதே கதாபாத்திரத்தின் பெயரில் கமல் நடிக்கும் புதிய ‘விக்ரம்’. வயதுக்கேற்ற கதாபாத்திரமாக இருந்தாலும் அடிதடியில் அதிரடியாய் அசரடிக்கிறார். எமோஷனல் காட்சிகளோ, நக்கல் நையாண்டிகளோ இனி புதிதாய் செய்ய ஒன்றுமில்லை என்னும் நிலைக்குக் கமல் வந்து பல காலமாகிவிட்டது. அப்படியிருந்தும், இதில் தூள் கிளப்பியிருக்கிறார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, திரையில் வெளியாகும் கமல் படம் என்பதால், அதற்கான மாஸ் மொமண்ட் காட்சிகளை இரண்டாம் பாதியில் பக்காவாக எழுதியிருக்கிறார் லோகேஷ். முதல் பாதியில் கமலுக்குக் காட்சிகள் குறைவுதான் என்றாலும், அதற்கெல்லாம் சேர்த்து இரண்டாம் பாதியில் ட்ரீட் வைத்திருக்கிறார்.
மாஃபியா டான் சந்தனமாக விஜய் சேதுபதி. தங்கப் பற்கள், போதை மருந்துகள், வித்தியாசமான ஹெர்ஸ்டைல், அண்டர்பிளே என அதிகம் மெனக்கெட்டிருக்கிறார். ஆனால், அது ஏனோ பெரிதாக ஈர்க்காமல் ஒரு முயற்சியாக மட்டுமே கடந்துபோகிறது. நேர்மையான அதிகாரியாக பகத் பாசில். சிரித்துக்கொண்டே விரல்களை மடக்கி தேவையான பதில்களை உடைத்துப் பெறும் மனிதர். முதல் பாதி முழுக்கவே பகத்தின் ராஜ்ஜியம்தான். முதல் பாதி படத்தின் மொத்த பாரத்தையும் அவரே அசால்ட்டாகத் தூக்கிச் சுமந்திருக்கிறார். செம்பன் வினோத், அருள்தாஸ், காயத்ரி, நரேன், காளிதாஸ் ஜெயராம், சந்தானபாரதி மற்றும் ‘கைதி’ படக் குழுவினர் எனப் பெரும் பட்டாளமே படத்தில் நடித்திருக்கிறார்கள். இது போதாதென்று, விஜய் சேதுபதியின் உறவினர்கள் மட்டுமே ஒரு வீடு முழுக்க நிறைந்திருக்கின்றனர்.

`துப்பாக்கி மற்றும் தோட்டாவைத்தான் காதலித்தான்’ என `வேட்டையாடு விளையாடு’ படத்தில் ஒரு வரி வரும். உண்மையில் அப்படித் துப்பாக்கியைக் காதலிப்பவர்கள் லோகேஷ் கனகராஜும், கமலும்தான் போல! தமிழ் சினிமா ஒன்றில் இத்தனை ரகமான துப்பாக்கிகள் வருவது இதுவே முதல் முறை. ஷார்ட் ரேஞ்ச், லாங் ரேஞ்ச், டபுள் பேரல் துப்பாக்கிகள், ரிவால்வர், இவை போகப் பெரிய சரவெடிகள் என இத்தனை துப்பாக்கிகள் இருக்கிறதா என ஆச்சர்யப்படும் அளவுக்குத் துப்பாக்கிகளை அடுக்கி அழகுபார்த்திருக்கிறார்கள். இது போதாதென்று பீரங்கி வேறு டெரர் காட்டியிருக்கிறது.
ஒரு மாஸ் சினிமாவில் எமோஷனல் காட்சிகள், பில்ட் அப் காட்சிகள், அதிரடி காட்சிகள் எல்லாமே இருக்கும். ஆனால், தமிழ் சினிமா ஒன்றில் தன் முந்தைய படத்தின் கதாபாத்திரங்களை இணைத்து, தலைப்புக்கு ஏற்ப பழைய ‘விக்ரம்’ படத்தையும் உள்ளே இழுத்து வித்தியாசமானதொரு கதையை எழுதியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ‘கைதி’ பட ரெபரென்ஸ் வரும் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கில் கைத்தட்டல் அதிர்கிறது. ஏற்கெனவே இணையம் முழுக்க வைரலாகிவிட்ட சூர்யாவின் கதாபாத்திரமும் பக்கா கூஸ்பம்ஸ் மெட்டீரியல். அடுத்த பாகத்துக்கான லீடை பக்காவாக செட் செய்து படத்தை முடித்திருக்கிறார்கள்.

கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு, சண்டைக் காட்சிகளுக்கும், இரவுக் காட்சிகளிலும் அத்தனை அழகியலுடன் உயிர் கொடுத்திருக்கிறது. அனிருத்தின் பின்னணி இசை படத்துக்குப் பெரும் பலம். ‘பத்தல பத்தல’ பாடல் கமர்ஷியல் ஊறுகாய் என்றாலும், மற்ற பாடல்களை வெறுமனே மாண்டேஜாக மாற்றிவிட்டு, தேவைப்படும் இடங்களில் எல்லாம் அதைப் பின்னணி இசையாக மாற்றி விளையாடியிருக்கிறார் அனிருத். ‘மாஸ் படங்களுக்கு இங்கே அணுகவும்’ என்கிற போர்டை நிரந்தரமாக இனி அவரே ஆணியடித்து வைத்துக்கொள்ளலாம் என்னும் அளவுக்கு மிரட்டியிருக்கிறார்.
படத்தின் பெரும்பகுதி ஸ்டன்ட் காட்சிகள்தான். வித்தியாசமான துப்பாக்கிகளுக்கு உழைத்த சதீஷ்குமாரின் கலை அமைப்புக் குழுவும், இரண்டாம் பாதியில் கண்ணில்படும் எல்லோருமே சண்டை செய்ய வேண்டும் என்கிற சூழலில் எல்லோருக்கும் விதவிதமான சண்டைக் காட்சிகள் அமைத்த அன்பறிவ் மாஸ்டர்களும் பாராட்டுக்குரியவர்கள்.
தியேட்டருக்கான காட்சிகளாகப் படத்தில் நிறைய விஷயங்கள் இருந்தாலும், முதல் பாதியில், முக்கிய கதைக்குள் நகர முதல் கியரையே பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். ஓர் இயக்குநராக, தான் எடுக்க நினைத்த படத்தை எந்தவித சமரசமுமின்றி ஒரு காட்சிக்கூட வெட்டாமல் காட்சிப்படுத்தியிருப்பதாகவே படம் விரிகிறது. இதனாலேயே முதல் பாதிக்கான ஸ்டேஜிங்கில் அதிக நேரம் செலவாகியிருக்கிறது. அதனாலேயே முதல் பாதி முடியும் தறுவாய் வரை ‘பொறுமையே பெருமை’ என்று பொறுத்தருள வேண்டியிருக்கிறது. ஒரு சில லாஜிக் பிரச்னைகளும் ஆங்காங்கே எட்டிப் பார்க்கின்றன.

அதே போல, எமோஷனல் காட்சிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆக்ஷன் இருக்கும் அளவுக்கு எமோஷனும் இருந்தால் மட்டுமே, படத்தின் கதாபாத்திரங்களோடு நாமும் ஒன்றிப்போக முடியும். அவர்களின் இழப்பை நம் இழப்பாகப் பார்க்க முடியும். அப்படிப் பார்த்தால் படத்தில் நடக்கும் கொலைகளில் பகத் பாசில் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும்தான் அந்தப் பாதிப்பை நமக்கும் கடத்துகின்றன. மற்ற கொலைகள் சம்பிரதாயமான காட்சிகளாகக் கடந்துவிடுகின்றன. தாத்தா – பேரன் உறவு மட்டும் ஒரு சிறிய விதிவிலக்கு என்பதைத் தாண்டி, பிற பாத்திரங்களின் எமோஷன்கள் நமக்கு எந்த உணர்வையும் கடத்தவில்லை என்பது பெரிய மைனஸ். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இத்தகைய காட்சிகளை இணைத்திருக்கலாம்.
அடுத்த பாகத்திற்கான லீடு, ஸ்பின் ஆஃப் பட வாய்ப்புகள் என ஏகப்பட்ட பாதைகளை இந்தப் படம் உருவாக்கியிருக்கிறது. இந்த யுனிவர்ஸ் ஆஃப் மேட்னஸ், நிச்சயம் தமிழுக்குப் புதிதுதான்! சில ஆண்டுகள் கழித்து வெளியாகும் கமல் படம் என்பதாலும், தமிழில் இத்தனை நடிகர்கள் ஒன்றிணைந்து ஒரு திரைப்படத்தின் மாஸை ஏற்றியிருப்பதாலும், நிச்சயம் நாமும் உரத்த குரலில் `விக்ரம்’ சொல்லலாம்.