புதுடில்லி-விமான நிலையங்கள் மற்றும் விமானங்களில் முக கவசம் அணியாத பயணியருக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும், விமான பயணம் மேற்கொள்ள தடை விதிப்பது போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஹரிசங்கர் கடந்த ஆண்டு மார்ச் மாதம், மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் இருந்து புதுடில்லிக்கு, ‘ஏர் – இந்தியா’ விமானத்தில் பயணம் மேற்கொண்டார். அப்போது, விமான நிலையத்திலும், விமானத்திலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பயணியர் கடைப்பிடிக்காததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை டில்லி உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இது தொடர்பாக நேற்று நடந்த விசாரணை யில், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:கொரோனா தொற்று பரவல் முற்றிலுமாக ஒழிந்துவிடவில்லை. வைரஸ் இன்னும் தன் கோர முகத்தை அவ்வப்போது வெளிக்காட்டி வருகிறது. எனவே, விமான நிலையங்கள் மற்றும் விமானங்களில் முக கவசம் அணியாமல் தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றாத பயணியருக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும். மேலும், விமானத்தில் பறக்க தடை விதிப்பது உள்ளிட்ட கடுமை யான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
Advertisement