கோவில்பட்டி: கோவில்பட்டியில் தயாராகும் ருசி மிகுந்த கடலை மிட்டாய்களை வீட்டிலிருந்தவாறே தபால் வழியாக பெற அஞ்சல்துறை ஏற்பாடு செய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் வானம் பார்த்த கரிசல் பூமியாகும். இங்கு விளைவிக்கப்படும் நிலக்கடலைக்கு இயற்கையாகவே இனிப்புச் சுவை அதிகம். இந்த நிலக்கடலையை கொண்டு தயாரிக்கப்படும் கடலைமிட்டாய்கள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதுடன், இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
பிரசித்தி பெற்ற பழனி பஞ்சாமிர்தத்தை அஞ்சலகங்கள் வழியாக அறநிலையத்துறை விற்பனை செய்வதுபோல், புவிசார் குறியீடு பெற்ற உணவுப் பண்டமான கோவில்பட்டி கடலை மிட்டாயையும் விற்பனை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கை எழுந்தது.
இதற்கான முயற்சியை கோவில்பட்டி கோட்ட தலைமை அஞ்சலக அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர். தற்போது இதற்கான முழு அனுமதியும் கிடைத்துள்ள நிலையில், நேற்று முன்தினம் அஞ்சலகம் மூலம் ஆர்டர்கள் பெற்றப்பட்டு, கடலை மிட்டாய்களை அனுப்பும் பணி நடந்தது. கடலைமிட்டாய் விற்பனைக்காக தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில்பட்டி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் எஸ்.சுரேஷ்குமார் கூறும்போது, ‘‘கடலை மிட்டாய் கேட்டு தினமும் பதிவாகும் அளவை, மறுநாள் காலை அந்த நிறுவனத்துக்கு அளிப்போம். அவர்கள் அன்று மதியத்துக்குள் கடலைமிட்டாய் பாக்கெட்களை எங்களிடம் வழங்குவார்கள். பதிவு செய்தவர்களுக்கு விரைவு தபால் மூலம் அதனை அனுப்புவோம். வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தபடியே அவற்றை பெற்றுக்கொள்ளலாம்.
ஒரு பெட்டியில் தலா 200 கிராம் கொண்ட 5 பாக்கெட்டுகள் வீதம் ஒரு கிலோ கடலைமிட்டாய் இருக்கும். இந்தியா முழுமைக்கும் தபால் செலவும் சேர்த்து இதன் விலை ரூ.390. இதற்கு அஞ்சல் நிலையத்தில் முன்பதிவு செய்யலாம். தபால்காரர்களை சந்திக்கும்போது அவரிடமே பணத்தை தந்தும் பதிவு செய்யலாம்’’ என்றார்.