ஹூஸ்டன்: அமெரிக்காவில் சொற்களை சரியாக கூறும் ‘ஸ்பெல்லிங் பீ” போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, ஹரிணி லோகன்,14, சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ‘ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ’ இறுதிப் போட்டி நடந்தது.இதில், எட்டாவது படிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹரினி லோகன், 90 வினாடிகளில், 22 ஆங்கிலச் சொற்களை சரியாகச் சொல்லி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.அவருக்கு, ஸ்கிரிப்ஸ் கோப்பை, 35 லட்சம் ரூபாய் பணம், மெரியம் – வெப்ஸ்டர் மற்றும் என்சைக்ளோபிடியா பிரிட்டானிக்கா நிறுவனங்களின் விருதுகள் கிடைத்துள்ளன.
ஹரிணி லோகனிடம், 26 சொற்கள் குறித்து கேட்கப்பட்டன. அவற்றில், 22 சொற்களை பிழையின்றி, 90 வினாடிக்குள் சொல்லி முடித்தார். இதையடுத்து அவர் வெற்றி பெற்றதாக நீதிபதிகள் அறிவித்தனர்.நேற்றைய போட்டியில் ‘புலுலேஷன்’ என்ற வார்த்தைக்கு ஹரிணி கூறிய பொருள் தவறு என நீதிபதிகள் அறிவித்தனர். இதையடுத்து சோகத்துடன் தன் இருக்கைக்கு திரும்பினார் ஹரிணி.
எனினும், நிகழ்ச்சியை நிறுத்தி விட்டு நீதிபதிகள் தங்களுக்குள் ஆலோசித்தனர். முடிவில் ஹரிணி கூறியது, இனப் பெருக்கம் அல்லது பெரும் திரளாக வருதலை குறிக்கும் என்பதால், அவர் சொன்னது சரி என அறிவித்தனர். இதையடுத்து ஹரிணி மீண்டும் மேடைக்கு வந்து போட்டியை தொடர்ந்தார்.
இது குறித்து ஹரிணி கூறுகையில்,” அந்த சில நிமிட ‘சஸ்பென்ஸ்’ எனக்கு பைத்தியம் பிடித்தது போல இருந்தது,” என்றார்.இப்போட்டியில் டென்வரைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான, ராஜூ,12, இரண்டாவது இடத்தை பிடித்தார். அவருக்கு வழங்கப்பட்ட, 19 சொற்களில், 90 வினாடிகளில், 15 சொற்களை தவறின்றி சரியாக கூறி வெற்றி பெற்றார்.
டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளியானவிஹான் சிபல்,13, மூன்றாவது இடத்தையும், வாஷிங்டனைச் சேர்ந்த, சஹர்ஷ் வுப்பலா, நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர்.அமெரிக்க ஸ்பெல்லிங் பீ போட்டியில், ஒவ்வொரு ஆண்டும் இந்திய வம்சாவளியினர் தான் சிறந்து விளங்குகின்றனர்.
Advertisement