சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள், முதல்முறையாக அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
முன்னதாக, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவரது பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும் அவரது உருவச்சிலை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நிறுவப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார்.
அதன்படி, கடந்த மே 28-ம் தேதி, குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடுவால் கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டது. அதேபோல், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த தினமான இன்று முதல்முறையாக அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.