2012-ம் ஆண்டில் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை காயத்ரி சங்கர், இந்த ஆண்டோடு தன் பத்து வருட திரைவாழ்க்கையை நிறைவு செய்கிறார். இன்ற வெளியாகியிருக்கிற விக்ரம் திரைப்படம் குறித்தும், சக நடிகர்களுடான அனுபவம் குறித்தும் சினிமா விகடன் நேயர்களுடன் காயத்ரி சங்கர் சில சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
விக்ரம் படத்தின் பஞ்சதந்திரம் ப்ரோமோ அனுபவம் உங்களுக்கு எப்படி இருந்தது?
நானும் என் நண்பர்களும் பஞ்சதந்திரம் படத்தின் மிகப்பெரிய ரசிகர்கள். இந்த ப்ரோமோ வருவது எனக்கு தெரியாது. திடீரென்று இன்ஸ்டாகிராம் ஓபன் செய்தபோது என்னை டேக் செய்திருந்தார்கள். ஃபிரிஸ்பி டோர்னமெண்ட் முடித்த பிறகு மன அழுத்தத்தை போக்கிக் கொள்ள, நாங்கள் அனைவரும் சேர்ந்து பஞ்சதந்திரம் பார்ப்போம். இந்த ப்ரோமோவைப் பார்த்தபோது பஞ்சதந்திரம் 2 வரப்போகிறது என்ற உற்சாகம் இருக்கிறது. ஆனால் இது நட்பிற்கான ஒர் உதாரணம். ஒரு நண்பனுக்காக இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்பது பெரிய விஷயம் அல்லவா!
விக்ரம் படத்திற்கு அசிஸ்டன்ட் டைரக்டராக வாய்ப்பு வேண்டும் என்று நீங்கள் கேட்டு வந்ததாக நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தீர்கள்…
எனக்கு லோகேஷ் கனகராஜ் ‘வெள்ளை ராஜா’ படத்தின்போது தான் அறிமுகம் ஆனார். அதில் அவர் எழுத்தாளராக இருந்தார். மாஸ்டர் படத்திற்கு பிறகு, ஒரு முறை பேசும்போது நான் உதவி இயக்குநராக இருந்துள்ளேன்; குறும்படங்கள் இயக்கியுள்ளேன் என்பது அவருக்கு தெரிய வந்தது. அப்போது அவர் என்னிடம் “அசிஸ்டெண்டாக சேர்கிறாயா… எங்கள் டீமில் பெண் இயக்குனர்கள் இல்லை” என்று கேட்டார். முதலில் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அப்போது நான் அவரிடம், லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர் என்பதில் எனக்கு பெருமையாக தான் இருக்கிறது. இருந்தாலும் உங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு தரலாமே’ என்று விளையாட்டாக கேட்டேன். அதன் விளைவாகவே விக்ரம் படத்தில் ஒரு கதாபாத்திரத்தை பண்ணச் சொல்லி கேட்டார். ஆனால் இந்த கதாபாத்திரம் கமல் சார் உடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் எதுவும் இடம்பெறாது என்று கூறினார். நான் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. கமல் சார் படத்தில் நான் இருந்தாலேபோதும், சும்மா நிற்க சொன்னாலும் கூட நான் நிற்பேன் என்று கூறி ஓகே சொல்லிவிட்டேன். கதை கதாபாத்திரம் என்று எதுவும் கேட்கவில்லை. ஷூட்டிற்கு முன்பு கதையைக் கூறினார்கள். பின்பு ஷூட்டிங்கின்போது ரத்னா ரைட்டராக வந்து விட்டார். அப்போது கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் அனைத்தையும் தெரிந்துகொண்டேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னுடைய அந்த கதாபாத்திரம் லோகேஷ் கனகராஜின் டிரேட்மார்க் சீன் ஆக இருக்கும்.
முதல் நாள் விக்ரம் ஷூட்டிங் ஸ்பாட் அனுபவம் எப்படி இருந்தது?
இவ்வளவு பெரிய படம், இவ்வளவு நாள் ஷூட்டிங், பெரிய யூனிட், அனைத்தும் எனக்கு புதுசு. இந்த அனுபவம் மிகவும் நன்றாக இருந்தது.
பகத் பாசில் நடிப்பு பயங்கரமாகமாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவருடன் நடித்தது எப்படியிருந்தது?
எனக்கு பகத் பாசிலின் நடிப்பு மிகவும் பிடிக்கும். திரையில் தான் வில்லனாக இருக்கிறார். நிஐத்தில் மிகவும் வேடிக்கையான சுபாவம் கொண்டவர். அவர் நடிப்பைப் பார்க்கையில் நமது நடிப்பு பத்தவில்லை என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. இன்னும் நான் சிறப்பாக செய்ய வேண்டும் எனத் தோன்றியது. ஒரு சீனுக்கு என்ன என்ன எமோஷன்ஸ் எல்லாம் கொண்டு வரலாம் என யோசித்து அனைத்தையும் வெளிக்காட்டுவார். இதை பகத் பாசில், விஜய் சேதுபதி, கமல்ஹாசன் சார் ஆகிய மூவரிடமும் காணலாம். இதை நானும் கற்றுக் கொண்டு அவ்வாறு நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
நீங்களும் விஜய் சேதுபதியும் நல்ல நண்பர்கள், இந்த படத்திற்கு அவரது body language காக பூஜா தேவாரியாவை வைத்து அவரை ட்ரெயின் செய்துள்ளார்கள் எனக் கூறினார்கள்; ஒரு நண்பராக அவரை பார்ப்பதற்கும் இந்த படத்தில் அவரை ஒரு பெர்பாமராக பார்ப்பதற்கும் என்ன வித்தியாசம் இருந்தது?
வருடத்தில் 20 படங்கள் நடிப்பவரால் எவ்வளவு வித்தியாசங்கள் காட்டிட முடியும், அது மிகவும் கடினமான ஒன்று. இருந்தாலும் அவர் தொடர்ந்து வித்தியாசங்களை காட்டிக்கொண்டு வருகிறார். ஒரு லெவலுக்கு சென்ற பிறகும் தன்னுடைய பாடி லாங்குவேஜை இம்ப்ரூவ் செய்து கொள்வதற்காக ஒரு ட்ரெயினரிடம் பயிற்சி எடுப்பது என்பது பெரிய விஷயம். இவையெல்லாம் ஈகோ இல்லாமல் இருக்கும் ஒருவரால் மட்டுமே முடியும். அவர் இவ்வாறு செய்திருப்பது எங்களைப்போல் சக நடிகர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது.
உலக நாயகனின் நடிப்பை நேரில் பார்த்திருப்பீர்கள். அந்த அனுபவம் குறித்து சில வார்த்தைகள்…
கொரோனா காலத்தில் சூட்டிங் நடந்ததால் நடிகர்கள் மட்டுமே சூட்டிங் ஸ்பாட்டில் இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் இருந்தது. எனவே என் காட்சிகள் இல்லாத நாட்களில், தொந்தரவு செய்ய வேண்டாம் என நானும் சூட்டிங் ஸ்பாட்டிற்கு செல்லவில்லை.