லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படம், ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியானது. விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி என பல நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.
அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். படத்தின் டிரெய்லர், பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்நிலையில் ‘கைதி’ படத்தை மற்றொரு முறை பார்த்துவிட்டு ‘விக்ரம்’ உலகுக்கு வாருங்கள் என இயக்குநர் லோகேஷ் ட்வீட் செய்திருந்தார். இதனால், விக்ரம் படம்’ கைதியின் நீட்சியாக இருக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
அதைப்போலவே, கைதி, மாஸ்டர் படங்களை போலவே விக்ரம் படத்திலும், போதைப்பொருள் தான் படத்தின் மையமாக உள்ளது.
பிரபல போதை பொருள் கடத்தல் மன்னன் விஜய் சேதுபதி(சந்தானம்). அவனுடைய பல கோடி மதிப்பிலான போதைப்பொருள் காணாமல் போகிறது.
அது கிடைக்கவில்லை என்றால் ரோலக்ஸ்’ தன் குடும்பத்தையே அழித்துவிடுவான் என்கிற பயத்தில் கடத்தியவர்களை தேடி சந்தானம் போகிறான்.
யார் அந்த ரோலக்ஸ்? கமல்ஹாசன்(கர்ணன்) மற்றும் ஃபஹத் ஃபாசில் (அமர்) இருவருக்கும், மறைக்கப்பட்ட போதைப்பொருளுக்கும் என்ன சம்பந்தம்?என்பதை சுவாரஸ்யமான திருப்பங்களுடனும், அதிரடி காட்சிகளுடனும் சொல்லியிருக்கிறார் லோகேஷ்.
ஆனால் படத்தில் ஃபஹத்தின் காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருக்கின்றன. இது கமலின் ரசிகர்களுக்கு லேசான ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற படங்களை ஒப்பிடுகையில், விக்ரமில் கமல்ஹாசனின் நடிப்பும், அவரது உடல்மொழியும், ஆக்ரோஷமும் தனித்துவமாக இன்னும் சொல்லப்போனால், ரசிகர்களை விசிலடிக்க வைக்கிறது. குறிப்பாக, கிளைமேக்ஸில் வரும் சண்டைக் காட்சி, நடிகர் சூர்யாவின் எண்ட்ரி படம் பார்த்த பின்பும் மனதில் நிற்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“