தமிழகத்தின் கன்னியாகுமரியில் அண்ணனின் உடலை தோண்டி எடுத்து வேறு இடத்தில் புதைத்த தம்பியிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கிராத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர். இவரது அண்ணன் ஜெஸ்டஸ் கடந்த மாதம் 16ஆம் திகதி சாலை விபத்தில் உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து, தாய்-தந்தை அடக்கம் செய்யப்பட்ட கல்லறைத் தோட்டம் அருகே ஜெஸ்டஸின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
ஆனால் அந்த இடம் அவரது தம்பி கிறிஸ்டோபருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனது இடத்தில் அண்ணனின் உடலை அடக்கம் செய்தது கிறிஸ்டோபருக்கு பிடிக்கவில்லை.
இதனால் குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி, 18 நாட்களுக்கு பிறகு ஜெஸ்டஸின் உடலை தோண்டியெடுத்து வேறொரு இடத்தில் அடக்கம் செய்துள்ளார்.
இதுகுறித்து பொலிஸாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அண்ணனின் உடலை வேறு இடத்தில் புதைத்தது குறித்து பொலிஸார் கிறிஸ்டோபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.