ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் தலைமையிலான அரசு திரைப்படத் துறையில் பல மாற்றங்களைச் செய்து வருகிறது. அந்த வகையில் சமீபகாலமாக திரையரங்க டிக்கெட் விற்பனை தொடர்பாக பல ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இந்நிலையில் தற்போது திரைப்பட டிக்கெட்டுகளை ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்வது தொடர்பான புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
இதன்படி ஆந்திரப் பிரதேச மாநிலத் திரைப்பட தொலைக்காட்சி மற்றும் திரையரங்கு மேம்பாட்டுக் கழகம் (APFDC), மாநில திரையங்குகளுடன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு நோடல் ஏஜென்சியாகச் செயல்படும் என்றும் இதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மாநிலத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் APFDC வழங்கும் இணையதள மூலம் மட்டுமே திரையரங்க டிக்கெட்களை விற்பனை செய்யவேண்டும். ஆன்லைனில் டிக்கெட்களை வழங்கும் வசதி இல்லாத திரையரங்குகள் விரைவில் அதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக புதிய படத்திற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் படம் வெளியாவதற்கு முந்தைய வாரங்களிலிருந்து மட்டுமே ஆரம்பமாகும். ஆன்லைனில் விற்கப்படும் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் 2% சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் திரையரங்கில் விற்கப்படும் டிக்கெட்களின் விலைகளை முறைப்படுத்த முடியும் என்றும் திரையரங்க வருமானத்தின் உண்மைத்தன்மையை உறுதிசெய்து அரசுக்கு ஏற்படும் இழப்பைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.