இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்டோர் மீது தேசத் துரோக வழக்கு தொடருவது குறித்து, அந்நாட்டின் அமைச்சரவை சிறப்பு குழு கூடி விவாதித்தது.
கடந்த மே 25ம் தேதி, இம்ரான் கான் தலைமையில் அவரது கட்சியினர், பாக்., தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பிரமாண்ட பேரணி நடத்தினர். பாக்., அரசை கலைத்து விட்டு பொதுத் தேர்தல் நடத்தக் கோரி நடந்த இந்த பேரணியில், போராட்டக்காரர்கள் – போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது வெடித்த வன்முறையில், ஏராளமான பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.
இதையடுத்து, பிரதமர் ஷெபாஸ் ஷரீப் தலைமையிலான அரசை கவிழ்க்க, இம்ரான் கான் சதித் திட்டம் தீட்டி இஸ்லாமாபாத் வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில், இஸ்லாமாபாத் வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்ட அமைச்சரவையின் சிறப்பு குழு கூட்டம் கூடியது.
அப்போது அரசை கவிழ்க்க சதி செய்த இம்ரான் கான், கைபர் பக்துன்கவா முதல்வர் மகமூத் கான், கில்ஜித் – பல்திஸ்தான் முதல்வர் காலித் குர்ஷீத் ஆகியோர் மீது தேசத் துரோக வழக்கு தொடர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. எனினும், இது குறித்து முடிவெடுக்கும் முன் சில ஆலோசனைகள் செய்ய வேண்டி உள்ளதால், வரும் 6ம் தேதி இறுதி முடிவெடுத்து, அரசுக்கு பரிந்துரைப்பது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
Advertisement