கோவை:
அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யாமல் தனியாரிடம் வாங்குவதாக கூறுகின்றனர். ஆனால் அன்றே தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 நாட்கள் உற்பத்தி செய்த மின் அளவை நான் கூறினேன்.
நாங்களும் இருக்கிறோம் என இருப்பை காட்டிக் கொள்ள வாய்க்கு வந்தபடி அண்ணாமலை பேசு வருகிறார். உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை அண்ணாமலை கூறி வருகிறார். எந்த குற்றச்சாட்டுகள் ஆக இருந்தாலும் ஆவணத்துடன் குற்றம்சாட்ட வேண்டும்.
சென்னை தமிழகத்தின் தலைநகராக இருந்தாலும், கோவை தொழில்துறையில் தலைநகராக உள்ளது. ரூ.1132 கோடியில் விமான நிலைய விரிவாக்கம் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது ரூ.800 கோடி அளவில் செலவிடப்பட்டு நிலம் எடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள நிலங்கள் அடுத்த 3 மாதங்களில் எடுக்கப்பட்டு பணிகள் நடைபெறும்.
தொழில்துறையுடன் முதல்-அமைச்சர் 3 மணி நேரம் அமர்ந்து அவர்களது கருத்துகளை கேட்டுள்ளார். அதனை செயல்படுத்த உத்தரவுகளையும் வழங்கியுள்ளார். தமிழகத்திற்கு கடன் சுமைகள் உள்ளன. அதனை சீரமைக்கும் பணிகள் நடக்கிறது. மக்கள் 1.41 லட்சம் மனுக்கள் கொடுத்துள்ளனர். 25 ஆயிரம் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு மற்ற மனுக்கள் மீது தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.