ரஷ்யா, உக்ரைன் இடையே கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கப்பட்ட போரானது, நேற்றுடன் 100 நாள்களைக் கடந்துவிட்டது. ஆனால், போர் மட்டும் நிற்காமல் இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த நிலையில், ரஷ்யப் படையைச் சேர்ந்த வீரர்கள் பலர், உக்ரைனில் போரிட மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து, ரஷ்ய வீரர்களில் ஒருவரிடம் பிபிசி செய்தி நிறுவனம் பேட்டியெடுத்துள்ளது.
அப்போது பேசிய அந்த வீரர், “போரில் நாங்கள் ஓர் பார்வையற்ற பூனைக்குட்டிகளைப் போல இருந்தோம். எங்களின் ராணுவத்தால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். போரில் இருக்கும்போதும், இரவில் தங்கும்போதும் தொடர்ந்து ஷெல் தாக்குதல் நடந்தன. 50 பேர் கொண்ட எங்களின் பிரிவில், 10 பேர் கொல்லப்பட்டனர். இதில் இருப்பவர்கள் அனைவருமே 25 வயதுக்குட்பட்டவர்களே. அனுபவமில்லாதவர்களில் சிலருக்கு எப்படிச் சுடுவது என்று கூட தெரியவில்லை. நீண்ட வரிசையில், ராணுவ அணிவகுப்புக்குச் செல்வதுபோல், ஹெலிகாப்டர் கூட இல்லாமல் சென்றோம். ஓர் இரவில், உளவு பார்க்காமல் நாங்கள் முன்னேறினோம். யாரேனும் பின்னாலிருந்து தாக்க முயற்சி செய்தலும், எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இதனால், எங்கள் பிரிவிலிருந்து தோழர்கள் பலர் இறந்திருப்பார்கள் என்று கூட நினைக்கிறேன்” எனக் கூறினார்.
ரஷ்யாவில், 18-27 வயதுக்குட்பட்ட பெரும்பாலானோர் ஒருவருட கட்டாய ராணுவ பயிற்சி முடிக்க வேண்டும். இந்த கட்டாய ராணுவ பயிற்சியை முடித்த இந்த வீரர், இரண்டு வருடத் தொழில்முறை ஒப்பந்தத்தின் அடிப்படையில், ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்துள்ளார். அதைத்தொடர்ந்து, இந்த ஜனவரியில் உக்ரைன் எல்லையில் நடைபெற்ற ராணுவ பயிற்சிக்கு அனுப்பட்டுள்ளார். அப்போது பயிற்சியிலிருந்த அவருடைய ராணுவ பிரிவு, உக்ரைனில் போர் தொடங்கப்பட்டபோது, உடனடியாக உக்ரைனில் தாக்குதல் நடத்தச் சென்றுள்ளது. இந்த நிலையில்தான், போர் அனுபவங்களை எதிர்கொண்ட இந்த வீரர், தற்போது மீண்டும் உக்ரைன் எதிராகப் போரிடப் போவதில்லை என தன் தளபதியிடம் கூறியுள்ளார். மேலும், “அவர்கள் எங்களைத் தடுக்க முயற்சிக்கவில்லை” என்றும் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
இதுகுறித்து ரஷ்ய மனித உரிமைகள் வழக்கறிஞர் அலெக்ஸி தபலோ என்பவர், “ராணுவத் தளபதிகள் ஒப்பந்தப் படையினரை தங்களின் பிரிவுகளுடன் தங்கும்படி மிரட்ட முயற்சிக்கின்றனர். ஆனால், ரஷ்ய ராணுவச் சட்டமானது, வீரர்கள் தாங்கள் விரும்பவில்லை என்றால், அவர்கள் சண்டையிட மறுப்பதற்கான சரத்துக்களை உள்ளடக்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.