மாஸ்கோ:
ரஷியா, உக்ரைன் போர் 100வது நாளை தாண்டிய நிலையில், இரு நாடுகளில் இருந்தும் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் இருக்கிறது. இதனால் ஆப்ரிக்க நாடுகள் உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் உணவு பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளன. இதற்கு ரஷியாதான் காரணம் என மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் வளர்ந்து வரு உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடிகளுக்கு மேற்கத்திய நாடுகள்தான் காரணம் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து பேசிய அவர், உலக உணவு சந்தையில் என்ன நடக்கிறது என்பதையும், அது சந்தித்து வரும் பிரச்சனைகளையும் ரஷியாவின் மீது திருப்புவதை காண முடிகிறது. மேலும், ரஷியாவிற்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் உலகச் சந்தைகளை மோசமாக்குவதுடன், உற்பத்தியை குறைத்து விலைகளை உயர்த்துகின்றன.
உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதியை ரஷ்யா தடுக்கவில்லை. ஆனால் மேற்கத்திய நாடுகள் உணவு பிரச்சனைகளுக்கு ரஷியாவை குற்றம்சாட்டி வருகின்றன. உக்ரைனில் இருந்து தானியங்களை ஏற்றுமதி செய்யும் கப்பல்களுக்கு பாதுகாப்பான பாதையை வழங்குவதற்கான சலுகைகளை தனது அரசாங்கம் வழங்கும்.
இவ்வாறு புதின் கூறினார்.