லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட பட்டாசு ஆலையில் நேற்று வெடிவிபத்து நேரிட்டது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், ஹாபூர் மாவட்டம் டெல்லியில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஹாபூர் மாவட்டத்தின் தவுலானா பகுதியில் ஏராளமான ஆலைகள் செயல்படுகின்றன. அங்குள்ள ஓர் ஆலையில் நேற்று பயங்கர சப்தத்துடன் வெடிவிபத்து நேரிட்டது. இதன் காரணமாக ஆலை முழுவதும் தீ பரவி, கொழுந்துவிட்டு எரிந்தது.
இந்த விபத்தில் 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் டெல்லி மற்றும் மீரட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஹாபூர் மாவட்ட ஆட்சியர் மேகா ரூபம் மற்றும் உயரதிகாரிகள் விபத்து நேரிட்ட ஆலைக்கு நேரில் சென்று, மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர். தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
விபத்து குறித்து ஹாபூர் காவல் துறை ஐ.ஜி. பிரவீண் குமார் கூறியதாவது:
வெடிவிபத்து நேரிட்ட தவுலானா ஆலையில் எலெக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பதற்காக உரிமம் பெறப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த ஆலையில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும், பிளாஸ்டிக் பொம்மைத் துப்பாக்கிகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.
ஆலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகளால் பயங்கரமான வெடிவிபத்து ஏற்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாக பட்டாசுகள் வெடித்துச் சிதறி, சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கும் தீ பரவியுள்ளது. விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். சட்டவிரோதமாக ஆலையை நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஹாபூர் மாவட்ட ஆட்சியர் மேகா ரூபம் கூறும்போது, “எலெக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்யவே ஆலைக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க சிறப்புக் குழு அமைக்கப்படும். தடயவியல் சோதனையும் நடத்தப்படும். சிறப்புக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
விபத்தை நேரில் பார்த்த சாட்சிகள் கூறும்போது, “ஆலையில் நேரிட்ட வெடிவிபத்தின் சப்தம் பல கிலோமீட்டர் தொலைவுக்கு கேட்டது. ஆலையின் கூரை இரும்புத் தகடுகளால் வேயப்பட்டிருந்தது. வெடிவிபத்தின்போது அந்த கூரை தூக்கி வீசப்பட்டது.
ஆலையில் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் துப்பாக்கிகள் உருகி, காயமடைந்த தொழிலாளர்களின் மீது படிந்தது. இதனால் தொழிலாளர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர். வெடிவிபத்தால் ஏற்பட்ட கரும்புகையால் சில தொழிலாளர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்” என்று தெரிவித்தனர்.
பிரதமர், முதல்வர் இரங்கல்
பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதி ஆலையில் நேரிட்ட விபத்து, இதயத்தை உலுக்குகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதில் மாநில அரசு விரைந்து செயல்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும். மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.