புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் மேற்கு மாவட்டமான ஷாம்லியின் அகமதுகர் கிராமத்தில் வசிப்பவர் சந்திரபால் காஷ்யாப். இவரது எருமைகளில் ஒன்று ஈன்ற கன்றுக்குட்டி, கடந்த ஆகஸ்ட் 25, 2020-ல் காணாமல் போனது.
அடுத்த மூன்று மாதங்களில் தனது எருமைக்கன்று, அருகில் உள்ள சஹரான்பூரின் பீன்பூர் கிராமத்தின் சத்வீர் என்பவரிடம் இருப்பதாக அறிந்துள்ளார். இதையடுத்து சந்திரபால் நேரில் சென்று கேட்டபோது, எருமை கன்றை தர சத்வீர் மறுத்துள்ளார்.
இதனால், சந்திரபால் தனது எருமைக் கன்றை மீட்க சட்டப் போராட்டத்தை தொடங்கி உள்ளார். இதற்காக, பீன்பூர் கிராமப் பஞ்சாயத்து, அப்பகுதி காவல் நிலையம் ஆகியவற்றில் புகார் செய்தும் பலனில்லை. பிறகு ஷாம்லி மாவட்ட எஸ்.பி. சுக்ரிதி மஹாதேவிடம் புகார் செய்தார். மேலும் தான் முதல்வர் யோகிக்கு அனுப்பிய புகாரின் நகலையும் அளித்துள்ளார்.
இதையடுத்து, எஸ்பி சுக்ரிதி, டிஎன்ஏ சோதனை செய்து உண்மையை கண்டறியுமாறு ஷாம்லி மாவட்ட அரசு கால்நடை மருத்துவ அதிகாரியிடம் கோரியுள்ளார்.
இந்த உத்தரவின்படி, பீன்பூர் வந்த கால்நடை மருத்துவர்கள் டிஎன்ஏ சோதனைக்காக சாம்பிளை எருமைக்கன்றிடம் எடுத்துச் சென்றுள்ளனர். இதை சந்திரபாலிடம் உள்ள தாய் எருமையின் டிஎன்ஏவுடன் பொருத்திப் பார்த்து உண்மை அறியப்பட உள்ளது.
நாட்டிலேயே முதன்முறை
இதில் வெளியாகும் முடிவின்படி, வழக்கு பதிவு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக வெளியாகியுள்ள இந்த வினோத வழக்கு உ.பி.யில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.