புதுடெல்லி: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்லோவாகியாவின் தலைநகர் பிராடிஸ்வாலாவில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், இந்தியாவின் ஆதரவைப் பெற இரு நாடுகளுமே முயற்சித்து வருகின்றன. ஆனால், இந்தியா எந்தவொரு நாட்டுக்கும் ஆதரவு அளிக்காமல், வன்முறை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், இந்தியா – சீனா இடையேயான பிரச்சினை அதிகரித்தால், இதுபோன்ற சவாலை இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று பிராடிஸ்வாலா நகரில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது, மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது மத்திய அமைச்சர் பதில் அளித்துப் பேசியதாவது:
இந்தியா, சீனா எல்லை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் நீடிக்கின்றன. இந்தியா-சீனா இடையேயான உறவு சிக்கலானதாகவே உள்ளது. ஆனால், அதை இந்தியா சமாளித்துவிடும் என்று தெரிவிக்கிறேன்.
சீனாவுடனான பிரச்சினை அதிகரித்தால், சர்வதேச நாடுகளின் ஆதரவை இந்தியா இழக்கக் கூடும் என்று ஐரோப்பிய நாடுகள் கருதுவது தவறானது. ஐரோப்பிய நாடுகள் தங்கள் பிரச்சினையை உலகப் பிரச்சினையாகப் பார்க்கின்றன. அதேசமயம் உலகப் பிரச்சினையை தங்கள் பிரச்சினையாகக் கருதுவதில்லை. இந்த எண்ணத்தை, மனோபாவத்தை அந்த நாடுகள் மாற்றிக் கொள்ள வேண்டும். ஆசிய நாடுகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது ஐரோப்பிய நாடுகள் அமைதியாகக் கடந்துவிடுகின்றன.
உக்ரைன்-ரஷ்யா பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஐரோப்பிய நாடுகள் தவறாகப் புரிந்துகொண்டுள்ளன. உக்ரைனின் புக்கா நகரில் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டபோது, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், படுகொலைகள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியது.
ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தில் நாங்கள் மதில் மேல் பூனையாக இருக்கவில்லை. நாங்கள் எங்கள் இடத்தில் தெளிவான நிலைப்பாடுடன் செயலாற்றி வருகிறோம். உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ள இந்தியா, அடுத்து என்ன செய்யப் போகிறது என்ற நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளது. சொல்லப்போனால் உலகில் உள்ள பல்வேறு சவாலான விஷயங்களுக்கு பதில் இந்தியாவில் இருந்துதான் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.