கோவை: நெருக்கடியான சூழ்நிலைகளின்போது எல்ஜிபிடிக்யூ+ தனிநபர்களை பாதுகாக்க மாவட்டம்தோறும் தங்குமிட வசதியை ஏற்படுத்த வேண்டும் என கோவை வானவில் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அந்தக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கல்கி சுப்பிரமணியம், சிவக்குமார் ஆகியோர் கோவையில் இன்று (ஜூன் 4) செய்தியாளர்களிடம் கூறியது: ”பெரும்பான்மை சமூகத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு வகையான பாகுபாடுகளை எல்ஜிபிடிக்யூ+ பிரிவினர் எதிர்கொள்கின்றனர்.
வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவது போன்ற நெருக்கடியான சூழ்நிலைகளின்போது எல்ஜிபிடிக்யூ+ தனிநபர்களை பாதுகாக்க அனைத்து மாவட்டங்களிலும் தங்குமிட வசதியை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். அரசு வேலை, கல்வி நிறுவனங்களில் திருநர்களுக்கு 2 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் திருநர்கள் தங்கள் பெயர், பாலினத்தை மாற்றுவதில் உள்ள சிரமங்களை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அறுவை சிசிச்சைக்கான ஆதாரம் அல்லது மூன்றாம் பாலினத்தவர் நல வாரியத்திடமிருந்து ஓர் அடையாள ஆவணத்தை சமர்ப்பிக்கும்படி வலியுறுத்துகின்றனர். கல்வி சான்றிதழில் பெயர், பாலின மாற்றம் கோரும் நபர்களிடம் மருத்துவ சான்றிதழ்கள் கேட்கப்படுகின்றன. இந்த நடைமுறைகளை கைவிட வேண்டும்.
அனைத்து பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் எல்ஜிபிடிக்யூ+ உள்ளடக்கிய பாலியல் கல்வி வகுப்புகளை வழங்க வேண்டும். எல்ஜிபிடிக்யூ+ தனிநபர்களின் உரிமைகளை கொண்டாடவும், வலுப்படுத்தவும் ஜூன் மாதம் உலகம் முழுவதும் சுயமரியாதை மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
சுயமரியாதை மாதத்தை முன்னிட்டு நாளை (ஜூன் 5) கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருசக்கர வாகன பேரணி நடைபெறும். வரும் 18-ம் தேதி திரளானோர் கலந்துகொள்ளும் பிரைட் பேரணி நடைபெறும். போலீஸார் அனுமதிக்கும் இடத்தில் பேரணி நடைபெறும் என்பதால் இடம் இன்னும் முடிவாகவில்லை” என்று அவர்கள் கூறினர்.