புவனேஸ்வர்: ஒடிசாவில் அனைத்து அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்தனர். புதிய அமைச்சரவை இன்று பதவியேற்க உள்ளது. ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் அரசு நடந்து வருகிறது. 3 ஆண்டுகளை இந்த அரசு நிறைவு செய்துள்ள நிலையில், அமைச்சரவை மாற்றி அமைக்கப்படலாம் என்று சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஆனால், அங்குள்ள பிரஜராஜ்நகர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்ததால், தேர்தல் பணி பாதிக்கக் கூடாது என கருதி அமைச்சரவை மாற்றம் முடிவு தள்ளி போடப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இடைத்தேர்தலுக்கான முடிவுகள் வெளியானது. இதில், பிஜு ஜனதா தளம் வெற்றி பெற்றது. இதையடுத்து, அனைத்து அமைச்சர்களையும் ராஜினாமா செய்ய முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டார். அதன்படி, 20 அமைச்சர்களும் தங்களின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் கணேஷி லாலுக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல், சபாநாயகர் சூர்ஜ்ய நாராயண் பாட்ரோவும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் புதிய அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இன்று காலை ஆளுநர் மாளிகையில் நடக்கும் விழாவில் புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது. புதிய அமைச்சரவையில் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த சிலருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. சரியாக பணியாற்றாத அமைச்சர்களுக்கு கல்தா கொடுக்கப்பட உள்ளது. சில எம்எல்ஏக்கள் புதிதாக வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. அவர்கள் தற்போது புவனேஸ்வரில் தங்கி உள்ளனர். குறிப்பாக, புதிய அமைச்சரவையில் எல்லா மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.