டெல்லி : ஓட்டல் உணவுகளின் விலை மீது சேவை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். டெல்லியில் பேட்டி அளித்த ஒன்றிய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், வாடிக்கையாளர்கள் சாப்பிட்டதற்கான உணவு தொகையில் சேவை கட்டணத்தை சேர்க்கக் கூடாது என்றார். தங்கள் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் தர விரும்பினால் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்திக் கொள்ளலாம் என்று கூறினார். உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த கட்டுப்பாடு ஏதும் இல்லை என்றும் பியூஷ் கோயல் கூறினார். ஊழியர்களின் சேவையில் திருப்தி ஏற்பட்டால் வாடிக்கையாளர்கள் தாங்களே முன்வந்து டிப்ஸ் தருவார்கள் என்று அவர் கூறினார். உணவகங்களில் சேவை கட்டணம் கட்டாயமாக வசூலிப்பது சட்ட விரோதமானது என்றும் உணவு விலை மீது சேவை கட்டணம் வசூல் செய்வது ஒரு ஏமாற்று வேலை என்றும் பியூஷ் கோயல் சாடினார்.