கடந்த ஓராண்டில் மத்திய குற்றப்பிரிவின் கீழ் 79 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், பணம் பெற்றுக்கொண்டு அரசு வேலை வாங்கி தருவதாக கூறுவோரிடம் ஏமாற வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக்கொகொண்டார்.
ஏஐசிடிஇ பெயரில் போலி நேர்முகத் தேர்வு நடத்தி வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த ஓராண்டில் மத்திய குற்றப்பிரிவின் கீழ் 79 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் ரூ.8 கோடி மதிப்பிலான வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் ரூ.190 கோடி மதிப்பிலான சொத்துகள் மற்றும் ரூ.7.69 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், வேலைவாய்ப்பு மோசடி புகார்களில் அரசு அலுவலங்களில் உள்ள அலுவலகர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் ஒரு அண்மைச் செய்தி…..
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூபாய் 4 கோடியே இருபத்தி ஒரு லட்சம் மதிப்பிலான 9 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு விமானங்களில் மூலம் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலையடுத்து விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணிகளை இறக்கியபின் விமானத்திற்குள் சோதனை நடத்தினர்.
இதையடுத்து விமான கழிவறையில் சோதனை செய்ததில் அங்கு பெட்டிக்குள் மர்ம பார்சல் இருந்ததை கண்டுபிடித்தனர். அதனை பிரித்து பார்த்தபோது தங்கக் கட்டிகள் இருந்தது தெரியவந்துள்ளது.
இதேபோல் சர்வதேச விமான வருகை பகுதியில் உள்ள கழிவறையில் ஒரு மர்ம பார்சலை பார்த்த விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், அவற்றை பிரித்து பார்த்தபோது அதிலும் தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரூபாய் 4 கோடியே இருபத்தி ஒரு லட்சம் மதிப்புள்ள ஒன்பது கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தங்கத்தை கடத்தி வந்தது யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.