கான்பூர் வன்முறையில் ஈடுபட்டோரின் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்படும் என்று உத்தரப் பிரதேச காவல்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச பாஜக செய்தித் தொடர்பாளரான நுபுர் சர்மா சில தினங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் முகமது நபி குறித்து அவதூறான கருத்துகளை கூறியதாக தெரிகிறது. இது முஸ்லிம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நுபுர் சர்மா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கான்பூரின் பரேட் மார்க்கெட் பகுதியில் முஸ்லிம்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது, அந்த மார்க்கெட்டில் உள்ள கடைகளை மூடுமாறும் அவர்கள் கூறினர். இதற்கு அங்குள்ள வியாபாரிகள் உடன்படாததால் இருதரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. கற்களும், பெட்ரோல் வெடிகுண்டுகளும் வீசப்பட்டன. இதில் பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை சிசிடிவி கேமரா மூலமாக காவல்துறையினர் அடையாளம் கண்டு வருகின்றனர். இதுவரை 36-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருக்கும் பலரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து உ.பி. காவல்துறை கூடுதல் இயக்குநர் (ஏடிஜிபி) பிரசாந்த் குமார் கூறுகையில், “வன்முறை நிகழ்ந்த பரேட் மார்க்கெட் பகுதியில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குண்டர் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதியப்படும். மேலும், குற்றவாளிகள் ஆக்கிரமிப்பு இடங்களில் தங்கியிருந்தால் அது இடிக்கப்படும்” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM