புதுடில்லி: காஷ்மீரில் அப்பாவி மக்களும், ராணுவத்தினரும் குறிவைத்து தாக்கப்படுவதற்கு பாகிஸ்தான் தூண்டுதலே காரணம் என நேற்று டில்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், உளவுத்துறை அமைப்புகள் கூறியுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
காஷ்மீரில் அப்பாவி பொது மக்களும் ராணுவத்தினரும், குறிவைத்து தாக்கப்பட்டு படுகொலை செய்யப்படும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. பயங்கரவாதிகள் கொட்டத்தை அடக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதையடுத்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே, ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா ,’ரா’ உளவுப்பிரிவு தலைவர் சமந்த் கோயல், ஐபி பிரிவு இயக்குநர் அர்விந்த் குமார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று டில்லியில் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில், உளவுத்துறை தலைவர்கள் கூறியதாக வெளியாகியுள்ள செய்தியில், காஷ்மீரில் வன்முறை அதிகரித்துள்ளது. ஆனால், இது ஜிகாதி அல்ல. இவற்றை சில அமைப்புகள் செய்கின்றன. வன்முறையை தூண்டுபவர்கள், பாகிஸ்தானில் இருந்து செயல்படுகின்றனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில், தலிபான் அமைப்பினர் உள்ளதற்கான ஆதாரம் இல்லை என கூறினர். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர், பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். ஆனால், காஷ்மீரை விட்டு வெளியேற்றப்பட மாட்டார்கள். என முடிவு செய்யப்பட்டுள்ளது. இன அழிப்புக்கு மத்திய அரசு எப்படி காரணமாக இருக்க முடியும். இந்த அரசு பல்வேறு கலாசாரங்களையும் உள்ளடக்கிய ஒற்றுமையான சமூகத்தை உருவாக்க விரும்புகிறது. இவ்வாறு அந்த அதிகாரி கூறியுள்ளார்.
Advertisement