காந்தி நகர்: குஜராத் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பரத்சிங் சோலங்கி ஒரு இளம்பெண்ணுடன் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தில் மோடி முதல்வராவதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாதவ்சிங் சோலங்கி நான்கு முறை மாநில முதல்வராக இருந்தார். இவரது மகன் பரத்சிங் சோலங்கி முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தார். இரண்டு முறை குஜராத் காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்தார். குஜராத் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக அறியப்படும் பரத்சிங் சோலங்கியின் சமீபத்திய செயல்பாடு கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. பரத்சிங் சோலங்கி ஆடம்பர பங்களாவில், ஒரு இளம்பெண்ணுடன் இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், பரத்சிங் சோலங்கியின் மனைவி ரேஷ்மா படேல் சிலருடன் பங்களாவில் உள்ள அறைக்குள் நுழைகிறார். அறையின் உள்ளே பரத்சிங் சோலங்கி இளம்பெண் ஒருவருடன் இருப்பது தெளிவாகப் பதிவாகி உள்ளது. இதனால் ஆத்திரமடையும் ரேஷ்மா, அந்த பெண்ணின் தலைமுடியை பிடித்து சரமாரியாகத் தாக்குகிறார். இதை பரத்சிங் சோலங்கி தடுக்க முயல்வதும், அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த வீடியோ காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே குஜராத் காங்கிரஸ் இளம் தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட ஹர்திக் படேல் பாஜகவுக்கு தாவிய நிலையில், இந்த வீடியோ விவகாரம் படேல் சமூகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவ்விவகாரம் குஜராத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், பரத்சிங் சோலங்கி திடீரென தீவிர அரசியலில் இருந்து சில மாதங்களுக்கு ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் சதி இருப்பதாக நினைக்கிறேன். இப்போது என் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன? என் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு செய்துள்ளேன்; இவ்விவகாரம் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. அதுவரை மேற்கொண்டு என் மனைவி குறித்து எதுவும் கூறமாட்டேன். காங்கிரஸ் கட்சிக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை. சில மாதங்களுக்கு அரசியல் நடவடிக்கையில் இருந்து ஒதுங்கி இருக்க விரும்புகிறேன்’ என்று கூறினார்.