கையில் மாலையுடன் காவல்நிலையம் சென்ற மணப்பெண் – திருமண நேரத்தில் எடுத்த துணிச்சல் முடிவு

தாலிகட்டும் நேரத்தில், மணமகன் வீட்டார் வரதட்சணை கேட்டு தகராறு செய்ததையடுத்து, கையில் மாலையுடன் மணமகள் நேரடியாக காவல் நிலையம் சென்று துணிச்சலாக புகார் கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்திலிருந்து, 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேவாரா என்ற கிராமத்தில், கடந்த 1-ம் தேதி திருமண நிகழ்ச்சி நடந்துக் கொண்டிருந்தது. மிக உற்சாகமாக நடந்துக்கொண்டிருந்த இந்த திருமணத்தில், மணமகன் மற்றும் மணமகள் மாலை மாற்றும் சடங்கினை மேற்கொண்டிருந்தனர். அப்போது, மணமகன் குடும்பத்தினர் திடீரென அதிக அளவிலான வரதட்சணை கேட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மணமகளின் உறவினர்கள், மணமகனின் குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இருகுடும்பத்துக்கும் இடையே மணமேடையிலேயே வாய் தகராறு நடைபெற்றுக் கொண்டிருந்தது. சண்டை பெரிதாக நீண்டுக் கொண்டே சென்று கைகலப்பு வரை செல்ல, இதனைப் பார்த்துக்கொண்டிருந்த மணமகள், சற்றும் தாமதிக்காமல் திருமண அலங்கார உடையிலேயே கையில் மாலையுடன், தனது குடும்ப உறுப்பினர்களை கூட்டிக் கொண்டு ஷாபூர் பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு நேரடியாக சென்றுவிட்டார்.
image
அங்கு வரதட்சணை கேட்பதாக மணமகன் குடும்பத்தினர் மீது மணப்பெண் புகார் அளித்ததையடுத்து, காவல்துறையினர் மணமகன் உள்பட, அவரது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்குப்பதிவு சம்பவத்தால் அதிர்ந்த மணமகன் குடும்பத்தினர், தாங்கள் திருமணத்திற்கு தயாராகவில்லை என்றும், சட்டப்பூர்வமாக இந்த விவகாரத்தை சந்தித்துக் கொள்வதாக காவல்துறையிடம் கூறிவிட்டு, திருமணத்தை நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர்.
image
உண்மையிலேயே வரதட்சனை தான் காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமாக என போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணத்தின் போது சிறு சிறு விஷங்களுக்காக மணமகள்கள் திருமணத்தை நிறுத்தும்போது, வரதட்சனை தகராறால், ஆரம்பத்திலேயே மணமகள் இந்தச் சம்பவத்தில் தைரியமாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.