கோவை பீளமேடு ஃபன்மால் அருகே, ஸ்விகி நிறுவனத்தில் உணவு டெலிவிரி செய்யும் இளைஞர் ஒருவரை, போக்குவரத்து காவலர் தாக்கும் வீடியா சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து மோகனசுந்தரம் என்பவர் கோவை காவல் ஆணையரிடம் அளித்துள்ள புகார் மனுவில்,
“நான் ஸ்விகியில் டெலிவரி பாயாக பணியாற்றி வருகிறேன். வெள்ளிக்கிழமை மாலை டெலிவரி பணியில் இருந்தேன்.
அப்போது ஃபன்மால் அருகே நேஷனல் மாடல் பள்ளி வாகனம், ஒரு பெண் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. நான் அந்த வண்டியை நிப்பாட்ட முயன்று நியாயம் கேட்டேன். உடனே அங்கிருந்த போக்குவரத்து காவலர் சதீஷ் என்னை அடித்து,
என் செல்போன், ஹெட்போன், கீ செயின் உள்ளிட்டவற்றை பிடிங்கி சென்றுவிட்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கூறியிருந்தார்.
மோகனசுந்தரம் பி.எஸ்.சி பட்டதாரி ஆவார். இந்த சம்பவம் வீடியோவாக வைரலாக, அந்த போலீஸ்காரர் சதீஷ்க்கு கண்டனங்கள் வலுத்தன.
இதையடுத்து சதீஷ் கன்ட்ரோல் ரூமுக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.