சென்னை: சமூகநீதி, சமத்துவம், சகோதரத் துவம் கொண்ட இந்தியாதான், மக்களாட்சி நிலவும் நாடாக இருக்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. மாணவர்களுக்குப் பரிசு வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
`தலைநிமிரும் தமிழகம்’ என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சி அமைந்தவுடன் தமிழகம் தலைநிமிரத் தொடங்கிவிட்டது.
பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களைப் பார்க்கும்போது, என் கல்லூரிக் காலத்தில் மேடையில் பேசியது நினைவுக்கு வருகிறது.
அப்போது, திராவிட இயக்கம்,பொதுவுடைமை இயக்கம், தேசிய இயக்கக் கோட்பாடுகள் மீது ஆர்வம் கொண்ட மாணவர்கள்தான், பேச்சுப் போட்டியில் பங்கேற்கக் கூடியவர்களாக இருந்தனர். பிற்காலத்தில் அவர்கள்தான் அரசியல் இயக்கங்களில் பணியாற்றும் அளவுக்கு உயர்ந்து நின்றார்கள்.
மாணவர்கள் அரசிய லுக்கு வரவேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. பேச்சாற்றலை மேலும் மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக கூறுகிறேன்.
பேச்சு எனும் கலை எல்லோருக்கும் வாய்க்காது. மேடையை ஆட்சி செய்வது என்பது, கோட் டையை ஆட்சி செய்வதுபோல கடினமானதுதான். அந்த வகையில், மாணவர்களுக்கு பேச்சுப் பயிற்சி அளிக்கக்கூடிய பாசறையாக சிறுபான்மையினர் ஆணையம் செயல்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பேச்சுப் போட்டியில் 4 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். அடுத்த ஆண்டு பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கும் அளவுக்கு, மாணவர்களைத் தயார்படுத்த வேண்டும். அதற்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.
கருணாநிதியும், அன்பழகனும்பேச்சுக்கலையில் சிறந்து விளங்கியவர்கள். இருவரும் தமிழ்நாட்டை பல காலம் ஆட்சிபுரிந்தவர்கள். இவர்களிடமிருந்து மாணவர்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். மாணவர்கள் நிறையபடிக்க வேண்டும். இப்போதெல்லாம் சுருக்கமான பேச்சுதான் சிறந்த பேச்சு என்று கருதப்படுகிறது.
ஒன்றே குலம்; ஒருவனே தேவன்,மக்களாட்சியின் மாண்பும், மதச்சார்பின்மையும், ஏன் வேண்டும் இடஒதுக்கீடு என்றெல்லாம் தலைப்பு கள் கொடுக்கப்பட்டுள்ளது பாராட் டுக்குரியது. இந்தியாவுக்குத் தேவையான தலைப்புகள்.
சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவமும் கொண்ட இந்தியாதான், மக்களாட்சி நிலவும் நாடாக இருக்கும். தமிழகத்தில் கட்சி மட்டுமல்ல, ஆட்சியும் திராவிட மாடலில்தான் நடந்துகொண்டிருக்கிறது.
திராவிட மாடல் ஆட்சி யாரையும் பிரிக்காது. அனைவரையும் ஒன்றுசேர்க்கும். யாரையும் தாழ்த்தாது.அனைவரையும் சமமாகப் பாவிக்கும். யாரையும் தோற்கடிக்காது. தோளோடு தோள் நின்று அரவணைக்கும். அந்த அடிப்படையில்தான் திராவிட மாடல் ஆட்சிநடந்துகொண்டிருக்கிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் சா.பீட்டர் அல்போன்ஸ் வரவேற்றார். அமைச்சர் செஞ்சிகே.மஸ்தான் அறிமுகவுரையாற்றினார். கவிஞர் வைரமுத்து, அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.பொன்முடி, மா.சுப்பிரமணியன் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர். சிறுபான்மையினர் நலத் துறைச் செயலர் ஆ.கார்த்திக் நன்றி கூறினார்.
திராவிட மாடல் ஆட்சி யாரையும் பிரிக்காது. அனைவரையும் ஒன்றுசேர்க்கும். யாரையும் தாழ்த்தாது. அனவரையும் சமமாகப் பாவிக்கும்.யாரையும் தோற்கடிக்காது. தோளோடு தோள் நின்று அரவணைக்கும்.