சினிமாவில் வன்முறை கொண்டாடப்படுவது ஏன்? – அடுத்த தலைமுறைக்கு நாம் வித்திடுவது என்ன?

சமீபகாலமாக திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகள் அதிகரித்து காணப்படுகின்றன. சண்டை, கொலை, கொள்ளைக்கு முன்னுரிமையளிக்கப்படுகிறது. இது நிஜத்தில் குற்றங்கள் அதிகரிக்க காரணமாகிறதா?

கதை, பாடல்கள், திரைக்கதைக்காக படங்கள் கொண்டாடப்பட்ட காலம் மாறி, அதிரடி அடிதடி சண்டைகளுக்காகவும், அதன் சவுண்ட்
எஃபெக்ட்-களுக்காகவும் படங்கள் கொண்டாடப்படுவதுதான் இன்றைய நிலையாக உள்ளது. ஃபீல் குட் திரைப்படங்களை விட அதிரடிப்
படங்கள் அதிக வசூலைக் குவிக்கின்றன. குறிப்பாக வன்முறை, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் எந்தவித தயக்கமும் இன்றி இளைஞர்கள் ஈடுபட்டு வருவதற்கு அடிப்படையாக இருப்பது சினிமாவில் வரும் வன்முறை காட்சிகள்தான் என்றால் அது
மிகையல்ல.

அதிலும் சமீபத்தில் வெளியான ‘சாணிக்காயிதம்’ படத்தில் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருந்தன. படத்தில் கதையை விட இரத்தக் களரி அதிகமாக இருந்ததாகவும், படம் பார்ப்பவர்களின் மன நிலையே எதிர்மறையாக மாறிவிடும் என்றும் இது தொடர்பாக ரசிகர்கள் கூறியிருந்தனர்.

image

‘புஷ்பா’ படத்தைப் பார்த்து தலைநகர் டெல்லியில் இளைஞர் ஒருவரை 3 சிறுவர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதேபோல் சூப்பர் டூப்பர் பிளாக் பஸ்டரான ‘கே.ஜி.எஃப். 2’ திரைப்படம் குறித்தும் அனைவரும் அறிந்ததே. குறிப்பாக பிரம்மாண்டம் மற்றும் மாஸ் ஆன சண்டைக் காட்சிகளுக்காகத்தான் இந்தப் படம் பெரிதும் பேசப்பட்டது. இந்தப் படத்தை பார்த்து சிறுவன் ஒருவன் அதிக அளவில் சிகரெட் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலும் வேதனையை ஏற்படுத்தியது.  ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்திலும் சில இடங்களில் வன்முறைக் காட்சிகளே இடம்பெற்றிருந்தன.

உச்ச நட்சத்திரங்களான விஜயின் ‘பீஸ்ட்’, அஜித்தின் ‘வலிமை’ போன்ற திரைப்படங்களிலும் ரத்தம் தெறிக்கும் துப்பாக்கிச்சூடு, சண்டை, கொலைகள் என வன்முறை காட்சிகள் அதிகமாகவே இருந்தன. இந்திய அளவில் புகழ்பெற்ற ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படமும் இதற்கு விதிவிலக்கல்ல. தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் உலக நாயகன் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படத்திலும் வன்முறை காட்சிகள் அதிகமாகவே நிறைந்துள்ளன.

image

ரத்தம் சொட்ட சொட்ட கத்தி, கட்டிங் ப்ளேட் அவ்வளவு ஏன் நூலைக் கூட ஆயுதமாக காட்டியிருப்பது வன்முறையின் உச்சபட்சம். கடைசியில் ஒரு பீரங்கியையே பற்ற வைக்கிறார் படத்தின் நாயகன் கமல். இருந்தாலும் ஒரு காட்சிகூட அலுப்பு ஏற்படுத்தவில்லை என்கிறார்கள் ரசிகர்கள். சினிமாவில் வன்முறையை ஹீரோயிஸம் ஆக காட்டுவதால் மக்கள் அதனை ரசிக்கத் தொடங்கி விட்டார்களா அல்லது மக்கள் வன்முறையை ரசிப்பதாலேயே சினிமாவில் அதிக வன்முறை காட்சிகள் இடம்பெறுகின்றதா? என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

NARCOS, BREAKING BAD, BETTER CALL SAUL என சில வெப் சீரிஸ்களிலும் வன்முறையே மையக்கருவாக உள்ளது. ஏற்கனவே, ஆன்லைன் விளையாட்டுகளில் துப்பாக்கியும், கையுமாக மூழ்கியிருக்கும் சிறுவர்களுக்கு, சினிமா மற்றும் வெப் சீரிஸ்களின் வன்முறைக் காட்சிகள், அவர்களிடம் எந்தவிதமான எதிர்வினையை ஏற்படுத்தும் என்பதை நினைத்து பார்க்கவே அச்சமாக உள்ளது.

இவ்வாறு திரைப்படங்கள் வன்முறைகள் காட்சிகள் நிறைந்து இருப்பினும், எப்படி இந்தப் படங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன என்று பார்க்கலாம். 

1. ஏ – 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும்
பார்க்கலாம்

2. யு/ஏ – 12 வது வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள்
பெற்றோர்களுடன் பார்க்கலாம்

3. யு – அனைவரும் பார்க்கலாம்

4. எஸ் – சில சிறப்பு குழுவினர் மட்டும் பார்க்கலாம்

இதில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானவைகளில் எவையெல்லாம் பெரியவர்களுக்கான படங்கள் என்று பார்க்கலாம்.

1. பீஸ்ட் – யு/ஏ

2. கே.ஜி.எஃப் – 2 – யு/ஏ

3. எதற்கும் துணிந்தவன் – யு/ஏ

4. தி காஷ்மீர் ஃபைல்ஸ் – ஏ

5. டான் – யு

6. பேச்சுலர் – ஏ

7. வலிமை – யு/ஏ

ஓடிடியில் வெளியானவைகளில்,

1. சாணிக்காயிதம் – ஏ

2. ஜெய்பீம் – ஏ

3. ஓ மணப்பெண்ணே – யு

4. மகான் – யு/ஏ

5. எஃப் ஐ ஆர் – யு/ஏ

6. நெற்றிக்கண் – ஏ

image

திரைப்படங்கள், வெப் சீரிஸ்களில் தொடர்ந்து வன்முறைக் காட்சிகள் இடம்பெறுவது சிறுவர் – சிறுமிகள் மத்தியில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா தெரிவித்துள்ளதை காணலாம். அவர் தெரிவித்துள்ளதாவது, “சிறுவர்களுக்கு எது நிஜம், எது கற்பனை என்பது தெரியாது. அடித்தால் விழுந்துவிடுவார்கள் என குழந்தைகள் நினைக்கக் கூடும். வன்முறை காட்சிகள் குழந்தைகளின் மனதை பாதிக்கக்கூடும். சமுதாயத்திலும் வன்முறை இருக்குமோ என்ற அச்சம் ஏற்படக் கூடும். வன்முறை நிறைந்த சமுதாயமோ என்ற சிந்தனையுடன் வளரக்கூடும்.

சிறு சிறு ஏமாற்றத்தையும் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு வளரக்கூடும். குழந்தைகள் வன்முறையில் ஈடுபட வாய்ப்புள்ளது. ஊடகங்கள் மட்டுமே காரணம் இல்லை. பெற்றோரின் பங்கும் அவசியம். வன்முறை தீர்வல்ல என குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

எது எப்படியாயினும், பொழுதுபோக்காக பார்க்கப்படும் படங்கள், நம்மை சிரிக்க வைக்கலாம். ஒருபடி மேலேபோய் நல்ல கருத்துக்கள் மூலம் சிந்திக்கவும் வைக்கலாம். ஆனால், அதுவே நமது அடுத்த தலைமுறைக்கு வன்முறையால் மட்டுமே அனைத்தையும் சாதிக்கமுடியும் என்ற விதையை மனதில் தூவ காரணமாக அமைந்துவிடக்கூடாது என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.