வீடு வாங்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.
குறிப்பாக சொந்த ஊரில் சொந்த வீடு இருந்தாலும் சென்னையில் செட்டில் ஆனவர்கள் சென்னையில் வீடு வாங்க வேண்டும் என்பதை மிகப்பெரிய வாழ்க்கையை கனவாக வைத்துள்ளனர்.
இந்திய பணக்காரர்களின் வீட்டை பார்த்து இருக்கீங்களா..? இது வீடு இல்லை, சொர்க்கம்..!

சென்னையில் சொந்த வீடு
ஆனால் அதே நேரத்தில் சென்னை புறநகரில் வீடு வாங்குவதாக இருந்தால் கூட 50 லட்சத்துக்கும் அதிகமாக வேண்டும் என்பதால் வீடு வாங்குவதற்கு எளிய முறையான வங்கிக் கடன் மூலம் பலர் வீடு வாங்கி, வாடகைக்கு பதிலாக வங்கி கடனை தவணைகளாக செலுத்தி வருகின்றனர். இதனால் ஒரு சில வருடங்களில் சொந்த வீடு கனவு நனவாகி வருகிறது.

வீட்டுக்கடன்
இந்த நிலையில் வீடு கட்டுவதற்கு கடன் தருவதற்காக பல வங்கிகள் முன்னெடுத்து வருகின்றன என்றும் அதிலும் குறைந்த வட்டியில் போட்டி போட்டுக்கொண்டு தனியார் வங்கிகளும், பொதுத்துறை வங்கிகளும் வீடு கட்டவும், வீடு வாங்கவும் கடன் வழங்கி வருகின்றன.

கண்காட்சி
அந்த வகையில் பாரத ஸ்டேட் வங்கி ‘தமிழ்நாடு பிராப்பர்டி எக்ஸ்போ 2022’ என்ற கண்காட்சியை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கி உள்ளது. இந்த கண்காட்சி நாளையுடன் முடிவடைய உள்ளதை அடுத்து நாளைக்குள் சொந்த வீடு கனவில் இருக்கும் பொதுமக்கள் இந்த கண்காட்சிக்கு சென்று, வீடு வாங்குவது குறித்து ஆலோசனையை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வீட்டுக்கடன்
இந்த கண்காட்சி குறித்து எஸ்பிஐ தலைமை பொது மேலாளர் ராதா கிருஷ்ணா அவர்கள் கூறியபோது, ‘இந்த கண்காட்சியில் 44 கட்டுமான நிறுவனங்கள் பங்கேற்று உள்ளதாகவும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த கண்காட்சி நடத்தப்படுவதாகவும் கூறினார்.

வீட்டின் தேவை
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் பலரும் தற்போது வீடுகளிலிருந்து பணிபுரிவதால் சொந்தவீடு அவசிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும், அதற்கேற்ற வகையில் பலர் வீடுகளை வாங்க ஆர்வம் செலுத்துகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

சேமிப்பு
வீட்டிலிருந்து பணிபுரிவதால் வாகன போக்குவரத்து செலவு உள்பட பல்வேறு செலவுகள் குறைந்ததை அடுத்து அந்த சேமிப்பின் மூலம் வீடு வாங்கும் திட்டத்தை பலர் செயல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வட்டி விகிதம்
எஸ்பிஐ வங்கியை பொருத்தவரை குறைந்தபட்சமாக 7.05 சதவீதம் முதல் அதிகபட்சமாக 7.55 சதவீதம் மட்டுமே வீட்டுக் கடனுக்கு வட்டி பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கண்காட்சியில் வீடு வாங்க புக் செய்பவர்களுக்கு சிறப்பு சலுகைகளையும் வழங்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அனுபவங்கள்
இந்த கண்காட்சி தொடக்க விழாவில் நடிகை ஷீலா ராஜ்குமார் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பதும் ஏற்கனவே எஸ்பிஐ வங்கிக்கடன் மூலம் வீடு வாங்கியவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆலோசனை
நாளையுடன் நிறைவடையும் இந்த கண்காட்சியில் அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள், வில்லாக்கள் உள்பட பல வீடுகள் குறித்த ஆலோசனைகள் பெறலாம் என்றும் சிறப்பு தள்ளுபடியும் உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி நாளை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடை பெறுவதால் வீடு வாங்கும் கனவில் இருப்பவர்கள் இந்த கண்காட்சியை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
Three days property expo in Chennai!
Three days property expo in Chennai! | சென்னையில் வீடு வாங்க போறீங்களா? நாளை இந்த இடத்திற்கு செல்லுங்கள்!