சென்னையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஜி ஸ்கொயர். சமீபத்தில் இந்நிறுவனம் பிரபல தமிழ் இதழான ஜூனியர் விகடன், அதன் ஆசிரியர்கள் மீது, சென்னை மயிலாப்பூர் இ – 1 காவல் நிலையத்தில் புகார் அளித்தது. அதில், தங்களுடைய நிறுவனத்தின் பெயரைக் கெடுப்பதற்காகவே ஜூனியர் விகடன் இதழ் தங்களைப் பற்றித் தொடர்ச்சியாக அவதூறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருவதாகக் கூறியிருந்தது.
மேலும், அவதூறு செய்திகள் வெளியிடாமல் இருக்க, கெவின் என்பவர் மூலம் தங்களிடம் 50 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும் புகாரில் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், புகாரின் அடிப்படையில், ஜூனியர் விகடனின் செய்தியாளர், அதன் ஆசிரியர், மாரிதாஸ், ‘சவுக்கு’ சங்கர் ஆகியோர் மீது வழக்குப் பதிவுசெய்தனர். கெவின் என்பவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். இவர் 2ஜி வழக்கில் தொடர்புடைய கூறப்பட்டு தற்கொலை செய்து கொண்ட ரியல் எஸ்டேட் அதிபர் சாதிக் பாட்ஷாவின் நெருங்கிய நண்பர் ஆவார்.
இந்த நிலையில், மே 25ஆம் தேதி சென்னை நகர காவல்துறை ஆணையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணை முடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கெவின் என்பவர் 50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியது விசாரணையில் புலனாகியுள்ளது. அதேபோன்று, அப்பத்திரிகையில் பணிபுரியும் சிலருடன் பணப் பரிவர்த்தனை நடைபெற்றதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.
எனினும், ஜூனியர் விகடன் பத்திரிகையின் இயக்குநர்கள் உள்ளிட்ட சிலர் மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்பதும் தெரியவந்தது. எனவே, இவர்களின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையிலிருந்து நீக்கிட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனிடையே, கெவினுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஜூனியர் விகடன் உறுதியாகக் கூறியது.
மேலும் ஜி ஸ்கொயர் நிறுவனம் புகாருக்கு மறுப்பு தெரிவித்து, ஜி ஸ்கொயர் நிர்வாக இயக்குநர் பாலா என்ற ராமஜெயம், கெவின் ஆகியோர் மீது, ஜூனியர் விகடன் ஆசிரியர் கலைச்செல்வன் ஜூன் 1 அன்று எதிர்ப்புகார் ஒன்றை அளித்தார். அதன்பிறகு, இந்த வழக்கில் இருந்து ஜூனியர் விகடன் இயக்குனர்கள், மாரிதாஸ், சவுக்கு சங்கர் ஆகியோர் விடுவிக்கப்பட்டு, எஃப்.ஐ.ஆர்.இல், “கெவின் மற்றும் பலர்” என்று மாற்றப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பிரிவுகள் 294(b) (ஆபாசமான வார்த்தைகள்), 384 r/w 511 (பணம் பறிக்கும் முயற்சி) மற்றும் 506(II) r/w 34 (பொது நோக்கத்துடன் உயிருக்கு மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“