டெல்லி: டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் விமானத்தை இழுக்க பயன்படுத்தப்படும் இழுவை வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பயணத்திற்கு பின் விமானத்தை இழுத்து சென்று உரிய இடித்தில் நிறுத்துவதற்கு இழுவை வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.நேற்று மாலை டெல்லி விமான நிலையத்தில் சரக்குகளை கையாளும் பகுதியில் ஒரு விமானத்தை இழுத்து செல்ல இந்த இழுவை வாகனத்தை வரவழைக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக இழுவை வாகனம் தீப்பிடித்து எரிந்தது. சில அடி தூரத்தில் 2 விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால் சிறிது நேரம் விமான நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டது.இந்த தகவலையடுத்து விரைந்து வந்த டெல்லி இந்திரா காந்தி விமான நிலைய தீயணைப்பு துறையினர் ரசாயன நுரையை வாகனத்தின் மீது அதிவேகமாக செலுத்தி தீயை அணைத்தனர். சில நிமிடங்களில் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டதால் அதன் அருகே நிறுத்தப்பட்டிருந்த விமானங்கள் தப்பின. இழுவை வாகனத்தில் தீ பற்றியதற்கான காரணங்கள் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.