* தேசிய மகளிர் ஆணையம் காட்டம்புதுடெல்லி: டெல்லி மெட்ரோ நிலையத்தில் சட்டக் கல்லூரி மாணவியிடம் பல்கலைக் கழக முகவரியை கேட்பது போல், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது ‘பிறப்புறுப்பை’ காட்டிய விவகாரத்தில், சிஐஎஸ்எப் போலீஸ் அலட்சியமாக செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது. தலைநகர் டெல்லியின் ஹூடா சிட்டி சென்டர் நிலையத்தின் மெட்ரோ ரயிலில் குர்கிராமை சேர்ந்த 21 வயது சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் நேற்று முன்தினம் பயணித்தார். அந்த ரயிலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அந்த மாணவியை அணுகி டெல்லி பல்கலைக்கழகத்திற்கான வழியைக் கேட்டார். பின்னர் ஜோர் பாக் ஸ்டேஷனில் அந்த மாணவி இறங்கினாள். அடையாளம் தெரியாத அந்த நபரும், அந்த மாணவியை பின்தொடர்ந்தார். மீண்டும் டெல்லி பல்கலைக்கழகத்தின் முழுமையான முகவரியை கேட்டுள்ளார். அப்போது அந்த நபருக்கு உதவும் பொருட்டு, அவரது அருகில் நின்று முகவரி விபரங்களை கூறிக் கொண்டிருந்தார். திடீரென அந்த நபர், தனது பிறப்புறுப்பை மாணவியிடம் காட்டினார். அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, அங்கிருந்து வேகமாக ஓட்டம் பிடித்தார். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அங்கிருந்த மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை போலீசிடம் கூறினார். அவர்கள், ‘மேல்மாடியில் உள்ள அதிகாரிகளிடம் சென்று புகார் அளியுங்கள்’ என்று கூறியுள்ளனர். அதையடுத்து மேல் மாடிக்கு சென்று சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தார். அவர்கள் மெட்ரோ ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, அந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து மாணவியிடம் விசாரித்தனர். அந்த காட்சிகளில் குற்றம்சாட்டப்பட்ட நபர், அந்த மாணவியை பின்தொடர்ந்து செல்வது பதிவாகி உள்ளது. ஆனால், அந்த நபர் குறித்த முழு விபரம் தெரியவில்லை என்று அலட்சியமாக அவர்கள் பதில் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, நேற்று முன்தினம் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், ‘நான் அவர்களிடம் (சிஐஎஸ்எப் போலீஸ்) சம்பந்த நபர் மீது ஏதாவது நடவடிக்கை எடுங்கள் என்று கூறினேன். ஆனால், அந்த நபர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவர்கள் என்னைக் குற்றம் சாட்டத் தொடங்கினர். அந்த நபர் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறி விட்டதால், நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று கூறினர்’ என்று பதிவிட்டிருந்தார். இவரது இந்த பதிவு டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்விவகாரம் தொடர்பாக அந்த மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் டெல்லி போலீசார் வழக்குபதிவு செய்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம், மேற்கண்ட வழக்கில் தேவையான ஒத்துழைப்பு வழங்க தங்கள் தரப்பு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட நபரை உடனடியாகக் கைது செய்யக் கோரி டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானாவுக்கு, தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. டெல்லி மகளிர் ஆணையமும், காவல்துறைக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு மாணவி அளித்த பேட்டியில், ‘நீதி கிடைக்கும் வரை போராடுவேன். டெல்லி மெட்ரோவில் துன்புறுத்தலுக்கு ஆளானது இதுவே முதல் முறை. மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. பொதுப் போக்குவரத்து அமைப்பில் பெண்களுக்கான பாதுகாப்பு வசதிகள் இல்லை. இதுபோன்ற வழக்குகளைக் கையாள்வதில் காவல்துறை அதிகாரிகள் விரைவாக செயல்படுவதில்லை’ என்று கூறினார். இதுகுறித்து டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் கூறுகையில், ‘எப்ஐஆர், சிசிடிவி காட்சிகள், பாதிக்கப்பட்டவருக்கு உதவ மறுத்த பாதுகாப்புப் பணியாளர்களின் விபரங்கள் மற்றும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் நகலை கோரியுள்ளேன். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும், குற்றவாளிகளை பிடிக்க பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்’ என்றார். டெல்லி ெமட்ரோ ரயிலில் மாணவிக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.