தன்னை தானே திருமணம் செய்யும் பெண்- பா.ஜ.க. கடும் எதிர்ப்பு

சூரத்:

குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த ஷாமா பிந்து என்ற 24 வயது இளம்பெண் வருகிற 11-ந்தேதி தனக்குதானே திருமணம் செய்து கொள்வதாக கூறியிருப்பது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற திருமணங்களைபோல மந்திரங்கள் ஓத வழக்கமான சடங்குகளுடன் இந்த திருமணத்தை அங்குள்ள ஹரி ஹரேஷ்வர் கோவிலில் நடத்தபோவதாகவும் அவர் அறிவித்து உள்ளார். இந்த திருமணத்துக்கு பெற்றோர் குறுக்கே நிற்கவில்லை. அவர்களும் சம்மதம் தெரிவித்து உள்ளனர். திருமணத்திற்காக அவர் அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் விநியோகித்து வருகிறார்.

9-ந்தேதி திருமண சடங்குகள் தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது. சமூகவலைதளங்களில் ஷாமா பிந்துவின் இந்த விநோத திருமணம் பற்றி தான் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இதனால் அவர் பிரபலமாகிவிட்டார். அவரது இந்த திருமணத்தை தான் தற்போது அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.

இந்தநிலையில் ஷாமா திருமணத்தை இந்து கோவிலில் நடத்துவதற்கு பாரதிய ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக பா.ஜனதா நகர துணைத்தலைவர் சுனிதா சுக்லா கூறியதாவது:-

இது போன்ற தனக்கு தானே திருமணம் செய்வது என்பது இந்து மதத்திற்கு எதிரானது. பிந்துவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளது என்று நினைக்கிறேன்.

ஒரு ஆணை ஆண் திருமணம் செய்வது, பெண்ணை பெண் திருமணம் செய்வது என்பது இந்து கலாச்சாரம் கிடையாது. அது போன்றுதான் பிந்துவின் திருமணமும் சட்டத்துக்கு புறம்பானது. இதுபோன்ற திருமணத்துக்கு அனுமதி அளித்தால் இந்துக்களின் பிறப்பு குறையும், இதனால் அவரது திருமணத்தை இந்து கோவிலில் நடத்துவதை அனுமதிக்க முடியாது.

அவர் எந்த இந்து கோவிலிலும் திருமணத்தை நடத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதனை நாங்கள் தடுத்து நிறுத்துவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

இதுபோன்று பலரும் பிந்துவின் புதுமையான திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பி வருவதால் ஷாமா பிந்துவின் திருமணம் அவரை போலவே சர்ச்சையில் சிக்கி உள்ளது. இதனால் அவரது திருமணம் திட்டமிட்ட படி 11-ந்தேதி நடைபெறுமா என்பதிலும் சந்தேகம் எழுந்துள்ளது.

பட்டதாரி பெண்ணான ஷாமா பிந்து தற்போது வதோதராவில் உள்ள ஒருதனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது பெற்றோர்கள் இருவரும் என்ஜீனியர்கள் ஆவார்கள். தந்தை தென் ஆப்பிரிக்காவிலும், தாய் அகமதாபாத்திலும் வசித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.