”வரிசையாக ஆக்ஷன் படங்களைப் பார்த்த ரசிகர்களுக்கு ‘அடடே சுந்தரா’ ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்” என்று கூறியுள்ளார் நடிகர் நானி.
விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி, நஸ்ரியா நடித்திருக்கும் படம் ‘அன்டே சந்தரானிக்கி’. தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படம் ‘அடடே சுந்தரா’ என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. ஜூன் 10ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீடு சென்னை ஜி.ஆர்.டி கன்வென்ஷன் சென்ட்ரலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படத்தின் நாயகன் நானி, நாயகி நஸ்ரியா, துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ள அழகம் பெருமாள், ரோகினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய நானி “இந்தப் படத்தைப் பொறுத்தவரை நான் ரிலீஸுக்கு முன்பே நல்ல வரவேற்பைப் பெரும் என மிக நம்பிக்கையுடன் இருக்கிறேன். வரிசையாக ஆக்ஷன் படங்களைப் பார்த்த ரசிகர்களுக்கு இது வித்யாசமான அனுபவமாக இருக்கும்.” என்று பேசினார்
நிகழ்வில் பேசிய நஸ்ரியா “தமிழ்நாட்டில் இருந்து எனக்குக் கிடைத்த வரவேற்பு நான் கொஞ்சமும் எதிர்பார்க்காதது. மீண்டும் அடடே சுந்தரா படம் மூலம் திரும்ப வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.” என்று கூறினார்.
நடிகர் அழகம்பெருமாள் பேசும் போது “இது எனக்கு மிக முக்கியமான படம். ஏனென்றால் இது எனது முதல் தெலுங்கு படம். கூடவே படத்தின் தெலுங்கு டப்பிங்கையும் நானே பேசியிருக்கிறேன். இந்தப் படத்தில் பணியாற்றியது மறக்கமுடியாத அனுபவமாக அமைந்தது. இதற்காக படக்குழுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” எனப் பேசினார்.
நடிகை ரோகினி “சந்தோஷமாக ரசித்துப் பார்க்கும்படியான படமாக இது இருக்கும். நானியுடன் இதற்கு முன்பு இணைந்து நடித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை அவருடன் இணைந்து நடிக்கும் போதும் என்னுடைய மகனுடன் இருப்பது போன்ற உணர்வுதான் வரும். குடும்பங்களை இந்தப் படத்தின் இயக்குநர் விவேக் காட்டி இருக்கும் விதம் மிக அழகாக அமைந்துள்ளது. தொடர்ந்து வெற்றி படங்களில் இருப்பது மகிழ்ச்சி, அந்த வெற்றி இந்தப் படத்திலும் தொடரும் என நம்புகிறேன்” எனப் பேசினார்.
இதையும் படிக்கலாம்: மீண்டும் பேருந்து பயணத்தில் த்ரில்லர் கதை -கவனம் பெறும் பிரபு சாலமனின் ‘செம்பி’ ட்ரெய்லர்