வாழப்பாடி அருகே நகை கடையில், நகை வாங்குவது போல் நடித்து, தங்க செயினை ஆடைக்குள் மறைத்து 3 பெண்கள் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சசி ஜூவல்லரி நகை கடையில், முக கவசம் என்றபடி மூன்று பெண்கள் நகை வாங்க வந்துள்ளனர். அவர்களில் ஒரு பெண் மோதிரம் வாங்க வந்ததாக தெரிவித்துள்ளனர். மற்ற இரு பெண்கள் தங்கச் செயின் வாங்கவேண்டும் என்று கடைக்காரரிடம் கூறியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கடைக்காரர் கடையில் உள்ள தங்க செயின்களை அவர்களிடம் காண்பித்து விட்டு, மற்றொரு பெண்ணுக்கு மோதிரம் குறித்த விவரங்களை தெரிவித்துக் கொண்டிருந்தார்.
இதற்கிடையே தங்கச் செயினை பார்த்துக் கொண்டிருந்த இரண்டு பெண்களில் ஒருவர், ஒரு தங்கச் செயினை எடுத்து தனது ஜாக்கெட்டுக்குள் ஒளித்து வைக்கிறார்.
இது அனைத்தும் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
இதனையடுத்து நகை நகைக்கடை உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில், சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையிலும். 3 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த 3 பேரையும் கைது செய்ய வலைவீசி தேடி வருகின்றனர்.