ஆத்தூர் நீர்த்தேக்க அணை தண்ணீரில் மூழ்கி 2 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து செம்பட்டி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பூஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் அப்பகுதியில் கூலிவேலை செய்து வருகிறார். இவரது அண்ணன் வேல்முருகன் பெரியகுளத்தில் குடியிருக்கிறார். இவரது மகள் தர்ஷினி(15) பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தற்போது விடுமுறை என்பதால் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில் உள்ள தனது சித்தப்பா வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் இன்று விடுமுறை நாள் என்பதால் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்க அணைக்கு குடும்பத்துடன் குளிக்க சென்றுள்ளனர்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக செல்வகுமார் தண்ணீரில் மூழ்கி உள்ளார். இவரை காப்பாற்றுவதற்காக தர்ஷினி தண்ணீரில் இறங்கியபோது இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆத்தூர் தீயணைப்புத் துறையினர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த தர்ஷினி மற்றும் செல்வகுமாரி உடல்களை மீட்டனர்.
சடலத்தை கைப்பற்றிய செம்பட்டி போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்வக்குமாருக்கு பூங்கொடி என்ற மனைவியும், ராகுல் என்ற மகனும் உள்ளனர். இது தொடர்பாக செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM