திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே காருக்குள் விளையாடி கொண்டிருந்த 3 குழந்தைகள் கதவை திறக்க தெரியாமல் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பணகுடி அருகே லெப்பை குடியிருப்பு பாலகர்பள்ளி தெருவை சேர்ந்த நாகராஜ் – அருணா தம்பதியரின் குழந்தைகள் நித்திஷ் (7), நிதிஷா (5), சுதன் – தபிஷா தம்பதியரின் மகன் கபிசந்த் (4) ஆகியோர் நேற்று பிற்பகல் 2 மணியளவில் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாகராஜனின் அண்ணன் மணிகண்டனின் காரில் விளையாடிக்கொண்டிருந்தனர். கார் கதவை திறந்து காருக்குள் விளையாடிக் கொண்டிருந்தனர். நெடுநேரம் விளையாடிய குழந்தைகளுக்கு கதவை திறக்க தெரியவில்லை.
இதனால் நீண்ட நேரம் காருக்குள் இருந்த குழந்தைகள், மூச்சுத்திணறி காருக்குள்ளயே மயங்கி விழுந்தனர். வெளியே விளையாட சென்ற குழந்தைகள் வெகுநேரமாகியும் வீட்டுக்கு திரும்பாததால் அவர்களது பெற்றோரும், அக்கம்பக்கத்தினரும் தேடத் தொடங்கினர். அப்போது காருக்குள் 3 குழந்தைகளும் மயங்கி கிடந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து 3 குழந்தைகளையும் மீட்டு பணகுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் குழந்தைகள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து பணகுடி போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்கள். காருக்குள் மூச்சுத்திணறி 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.